குமரியில் 8 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை தொடர்ந்து இதே நிலையை உருவாக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் கடந்த 8 நாட்களாக கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. தொடர்ந்து இதேநிலையை உருவாக்க கிராமம், கிராமமாக பரிசோதனைகளை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த 8 நாட்களாக கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. தொடர்ந்து இதேநிலையை உருவாக்க கிராமம், கிராமமாக பரிசோதனைகளை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
16 பேருக்கு கொரோனா
குமரி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நாகர்கோவில் வெள்ளாடிச்சி விளையைச் சேர்ந்த ஒருவரும், தேங்காப்பட்டணத்தைச் சேர்ந்த ஒருவரும் பூரண குணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து மீண்ட தேங்காப்பட்டணத்தைச் சேர்ந்தவர் முதன் முதலாக ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று வீடு திரும்பியுள்ளார். நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவர் தனது குடும்பத்தினரும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதால் வீடு திரும்ப மறுத்து வருகிறார்.
தடை செய்யப்பட்ட பகுதி
அதே சமயத்தில் மேலும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் வசித்த நாகர்கோவிலில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, மணிக்கட்டிப்பொட்டல் அனந்தசாமிபுரம், தேங்காப்பட்டணம் தோப்பு பகுதி ஆகிய இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே வரவும், வெளி பகுதிகளில் இருந்து மக்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை எப்போது நீங்கும்?
கடைசியாக தொற்று கண்டறியப்பட்ட நோயாளிக்கு எந்த தேதியில் கொரோனா கண்டறியப்பட்டதோ அந்த தேதியில் இருந்து 28 நாட்களில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றால் தடை செய்யப்பட்ட பகுதிகளின் தடை நீக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் கடைசியாக அனந்தசாமிபுரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 14-ந் தேதி நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்படி பார்த்தால் நேற்றுடன் 8 நாட்கள் ஆகியுள்ளது. அதன் பிறகு யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இன்னும் 20 நாட்கள் நீடித்தால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் தடை நீக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்ட பகுதிகளில் இருந்து குமரி திரும்பியவர்கள், கொரோனா தொற்றுள்ளவர்களிடம் நெருங்கி பழகிய 165 பேர் என மொத்தம் 4466 பேரும், அவர்களுடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்களில் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் நாட்கள் முடிய, முடிய அவர்கள் தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு 4 ஆயிரத்து 253 பேரும், அவர்களுடைய குடும்பத்தினரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி 213 பேர் மட்டுமே தனிமைப்படுத்துதலில் இருந்து வருகிறார்கள். அவர்களும் நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
துரித பரிசோதனை கருவி
இதற்கிடையே குமரி மாவட்ட சுகாதாரத்துறைக்கு ரேபிட் டெஸ்ட் கிட் என்ற துரித பரிசோதனை கருவிகள் 300 வழங்கப்பட்டு இருந்தது. அதில் 19 போலீசாருக்கும், கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளி ஒருவருக்கும் என மொத்தம் 20 பரிசோதனை கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதிலும் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. நேற்று மட்டும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி கொரோனா பரிசோதனை ஆய்வகத்தில் 51 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் புதிதாக 4 பேர் காய்ச்சல், சளி போன்ற பிரச்சினைகளுடன் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தனிமைப் படுத்தும் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய சளி மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளன.
சமூகத்தொற்றாக மாறவில்லை
இந்த நிலையில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியின் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளில் 8 பேருக்கு இன்று (வியாழக்கிழமை) பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதில் தொற்று இல்லாத பட்சத்தில் மீண்டும் ஒரு பரிசோதனை செய்யப்படும். அதிலும் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று டீன் சுகந்தி ராஜகுமாரி தெரிவித்தார்.
குமரி மாவட்டத்தில் கடந்த 8 நாட்களாக நடந்து வரும் பரிசோதனைகளில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாதது அது சமூக தொற்றாக மாறாததுதான் காரணம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா பரவவில்லையே என்று அப்படியே இருந்து விட முடியாது. தொடர்ந்து இதே நிலை நீடிக்க இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் கிராமம், கிராமமாகச் சென்று மக்களுக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
சமூக இடைவெளி
மேலும் அவர்கள் கூறுகையில், “மக்கள் தங்களுக்கு கொரோனா பரவாது என்று அசட்டு தைரியத்தில் கொரோனா விதிமுறைகளை குறிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்து வருகிறார்கள். கடைகளில் குறிப்பிட்ட இடைவெளி இன்றி கூட்டம், கூட்டமாக நிற்கிறார்கள்.
எனவே அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அடிக்கடி கை, கால்களை சுத்தம் செய்ய வேண்டும். அரசு அறிவிப்பை முறையாக கடைபிடித்து இதேபோன்று இனியாருக்கும் கொரோனா வந்து விடாதபடி செயல்பட வேண்டும்” என்றனர்.