முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மகன் நிகில் திருமணத்தில் விதிமீறலா? - அறிக்கை அளிக்க கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மகன் நிகில் திருமணத்தில் விதிமீறப்பட்டு உள்ளதா? என்பது குறித்து அறிக்கை அளிக்க கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு,
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மகனும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனுமான நிகில் குமாரசாமி திருமணம் கடந்த 17-ந்தேதி ராமநகர் மாவட்டம் பிடதி அருகே ஒரு பண்ணை வீட்டில் நடந்தது. இந்த திருமணத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி பலர் கலந்துகொண்டதாகவும், அவர்கள் யாரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என்றும், எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அதுபோல் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தற்போது அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என்றும், எனவே அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படியும் மற்றொரு பொதுநல வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் தொடரப்பட்டது.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
இந்த இரு பொதுநல வழக்குகளும் நேற்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஏ.எஸ்.ஓகா, நிகில் குமாரசாமி திருமணம், ஊரடங்கு உத்தரவை பின்பற்றி நடத்தப்பட்டதா? இல்லையா? என்பது பற்றியும், விதிமீறி நடத்தப்பட்டதா என்பது குறித்து கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் தலைமை நீதிபதி கூறுகையில், மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஏதாவது வழிமுறைகள் வகுக்கப்பட்டு இருக்கிறதா?, அந்த வழிமுறைகள் என்னென்ன?. மக்கள் பிரதிநிதிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா? என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சமூக இடைவெளியை கடைப்பிடிக்க...
அதே வேளையில் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கட்டாயம் சமூகஇடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கர்நாடக ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.