தஞ்சையில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு; சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்

தஞ்சையில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

Update: 2020-04-22 23:31 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

பாதாள சாக்கடை

தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகரில் உள்ள 51 வார்டுகளிலும் உள்ள கழிவுநீரை சேகரிப்பதற்காக 4 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கரந்தை, பள்ளிஅக்ரகாரம், வடக்குவாசல், மாரிக்குளம் ஆகிய இடங்களில் இந்த கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கழிவுநீர் உந்து நிலையங்களில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் சமுத்திரம் ஏரியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு சுத்திகரிக்கப்பட்டு பாசனத்துக்கு தண்ணீர் விடப்படுகிறது. மேலும் மாநகரில் கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆள்நுழை குழிகள் அமைக்கப் பட்டுள்ளன.

குழாயில் உடைப்பு

தஞ்சை பர்மாகாலனி மாரிக்குளம் சுடுகாடு அருகே உள்ள சாலையில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 2 நாட்களாக பாதாள சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த கழிவுநீர், மழைநீர் வடிகால் வழியாக செல்கிறது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. மேலும் அந்த பகுதியில் உள்ள பல தெருக்களிலும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ஆள்நுழை குழிகள் வழியாகவும் சாலைகளில் வெளியேறுகிறது.

இதனால் இந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கொரோனா நோய் பரவாமல் தடுக்க ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளனர். இந்த நிலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் துர்நாற்றத்தால் மக்கள் மேலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாரிக்குளம் சுடுகாட்டில் இருந்து சமுத்திரம் ஏரிக்கு கழிவுநீர் கொண்டு செல்லப்படும் குழாய்களில் அடைப்பு காரணமாக இங்கு உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருகிறது.

சரி செய்ய வேண்டும்

எனவே மாநகராட்சி அதிகாரிகள் அடைப்புகளை சரி செய்வதோடு, குழாயில் உடைப்பை சரி செய்ய வேண்டும். மேலும் துர்நாற்றம் வீசுவதை தவிர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்