பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய பகுதிகளில் கைகழுவும் வசதியை ஏற்படுத்த வேண்டும்
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய பகுதிகளில் கைகழுவும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று கொரோனா தடுப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.
தஞ்சாவூர்,
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய பகுதிகளில் கைகழுவும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று கொரோனா தடுப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.
ஆய்வு கூட்டம்
தஞ்சை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மண்டல கொரோனா தடுப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் சண்முகம் தலைமை தாங்கினார். கலெக்டர் கோவிந்தராவ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சண்முகம் பேசுகையில்,
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய பகுதிகளில் கைகழுவும் வசதியை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் கொரோனா நோய்த்தொற்று சங்கிலியை உடைக்க முடியும். தஞ்சை மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் தற்காலிக காய்கறி சந்தைகள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளிட்ட இடங்களில் கைகழுவும் வசதியினை ஏற்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்பு கவச உடைகள்
முன்னதாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்ட புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனத்தினை மண்டல கொரோனா தடுப்பு அலுவலர் சண்முகம் பார்வையிட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் 18 வகையான வீட்டு உபயோகப்பொருட்கள் அடங்கிய ரூபாய் 750 மதிப்பிலான நிவாரண பொருட்கள் அடங்கிய 550 நிவாரண பெட்டகங்களும் கண்காணிப்புக்குழு அலுவலரிடம் வழங்கப்பட்டது.
மேலும் சென்னை தொண்டு நிறுவனம் சார்பில் 500 முக கவசங்களும், சேவாலியா தொண்டு நிறுவனம் சார்பில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மற்றும் மருத்துவபணியாளர்களின் பயன்பாட்டிற்காக ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 100 முழு பாதுகாப்பு கவச உடைகளும் மண்டல கொரோனா தடுப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் சண்முகத்திடம் வழங்கப்பட்டது.
அப்போது சிறப்பு ஐ.ஜி. சாரங்கன், டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சக்திவேல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.