திருவண்ணாமலை அருகே, அம்மிக்கல்லை தலையில் போட்டு தாய்-தந்தை கொடூர கொலை - திருமணம் செய்து வைக்க தாமதப்படுத்தியதால் வாலிபர் ஆத்திரம்

திருமணம் செய்து வைக்க தள்ளிப்போடுகிறார்களே என நினைத்த வாலிபர், தாய்-தந்தையை அம்மிக்கல்லால் தலையில் போட்டு கொடூரமாக கொன்ற சம்பவம் தண்டராம்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெஞ்சை பிளக்க வைக்கும் இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-

Update: 2020-04-22 22:15 GMT
தண்டராம்பட்டு,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் அருகிலுள்ள ஜி.குப்பம் தாங்கல் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 60), விவசாயி. இவரது மனைவி மாங்கனி (55). இவர்களுக்கு ராம்குமார் (30) என்ற மகனும் 3 மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது. ஆனால் ராம்குமாருக்கு சற்று மனநல பாதிப்பு ஏற்பட்டு இருந்ததால் திருமணம் செய்வதை பெற்றோர்கள் தள்ளிப்போட்டு வந்தனர். எனினும் ராம்குமார் திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் தினமும் தகராறு செய்து வந்துள்ளார். பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு ராம்குமார் தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் கூறவே அவர்கள் சற்று பொறுத்துக்கொள். நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் என கூறி சமரசம் செய்தனர். அதன்பிறகு கோவிந்தசாமியும் மாங்கனியும் தூங்க சென்று விட்டனர்.

தனக்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார்களே என அவர்கள் மீது ராம்குமார் ஆத்திரத்துடன் இருந்தார். இந்த நிலையில் ஆத்திரம் தீராத அவர் தூங்கிக்கொண்டிருந்த தாய் மாங்கனி, தந்தை கோவிந்தசாமி ஆகியோர் மீது அம்மிக்கல்லை தலையில் தூக்கி போட்டார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். அதன்பின் ராம்குமார் சைக்கிளை எடுத்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு தப்பி வந்து விட்டார்.

அக்கம்பக்கத்தினர் இதனை பார்த்து சாத்தனூர் போலீசாருக்கு தெரிவித்தனர். ஊரடங்கு பணியில் தீவிரம் காட்டியிருந்த போலீசார் பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட கோவிந்தசாமி-மாங்கனி உடலை அவர்கள் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, ஏட்டு இளவரசன் ஆகியோர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தப்பி ஓடிய ராம்குமார் திருவண்ணாமலையில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்