தஞ்சை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54 ஆக உயர்வு
தஞ்சை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ்
தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், மாவட்டத்திலேயே முதன் முதலில் பாதிக்கப்பட்ட கும்பகோணத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி குணம் அடைந்ததால் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நேற்று முன்தினம் 3 பேர் குணம் அடைந்ததை தொடர்ந்து அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 25 வயதான ஆண், அதிராம்பட்டினத்தை சேர்ந்த 36 வயதான ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒரத்தநாடு நெய்வாசல் பகுதியை சேர்ந்த 29 வயதான பெண், 34 வயதான பெண், 45 வயதான பெண் ஆகிய 3 பெண்களுக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் 3 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
54 ஆக உயர்வு
இவர்கள் 5 பேரும் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்களை சந்தித்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக 14 பேர் அனுமதி
இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டோர் சிகிச்சை பிரிவில் சளி, இருமல், தொடர் காய்ச்சல் காரணமாக 14 பேர் நேற்று சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு தொண்டை சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கான முடிவுகள் விரைவில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் 7 பேர் செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திலுள்ள கொரோனா தடுப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.