கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சையில் தெருக்கள், சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகள் வாகன ஓட்டிகள் சுற்றி சுற்றி வந்த அவலம்
தஞ்சையில், கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் நேற்று முதல் தெருக்கள், சாலைகளில் ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.
தஞ்சாவூர்,
தஞ்சையில், கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் நேற்று முதல் தெருக்கள், சாலைகளில் ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். இதனால் வாகன ஓட்டிகள் சுற்றிச்சுற்றி வந்தனர்.
கொரோனா தடுப்பு பணி
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் அவர்களுக்கு 3 விதமான வண்ண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அட்டை வைத்திருப்பவர்கள் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் வெளியில் வந்து பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் அனுமதிக்கப்பட்ட நாளில் ஒருமுறை மட்டுமே வர வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தினர். அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, மருந்துகள் அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ள கடைகளுக்குள் சென்று வாங்க வேண்டும் எனவும், அதுவும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆங்காங்கே தடுப்புகள்
மருந்துக்கடைகள், மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதையும் மீறி வாகன பயன்பாடுகள் அதிகரித்த வண்ணம் இருந்தன. போலீசார் வழக்குப்பதிவு செய்தாலும் வாகன பயன்பாடு அதிகரித்த வண்ணம் இருந்ததையடுத்து நேற்று முதல் வாகன பயன்பாட்டை குறைக்கும் வகையில் போலீசார் ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தினர்.
தஞ்சை மாநகர் முழுவதும் முக்கிய சாலைகள், தெருக்களில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தினர். தெருக்களில் கயிறு கட்டியும், கம்புகளை வைத்தும், இரும்பு கம்பியானால் ஆன தடுப்புகளை வைத்தும் போலீசார் தடுப்புகள் அமைத்தனர். மேலும் சாலைகளிலும் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தியதால் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் எந்த வழியாக செல்வது என தெரியாமல் தெருத்தெருவாக சுற்றிச்சுற்றி வந்தனர். அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள் கூட நேராக செல்ல முடியாமல் சுற்றிச்சுற்றி சென்றன.
போலீசார் கண்காணிப்பு
மேலும் கீழவாசல் பகுதியில் கடைகள் அதிகமாக இருப்பதால் அந்த பகுதியில் மக்கள் கூட்டமும் அதிகமாக காணப்படும். இதனால் அதையும் தவிர்க்கும் வகையில் கடையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தடுப்புகளை ஏற்படுத்தி யாரும் வாகனங்களில் செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தினர்.
வாகனங்களில் வந்தவர்கள் போலீசார் தடுப்புகளை அமைத்த இடத்தின் அருகே வாகனங்களை நிறுத்தி விட்டு நடந்து சென்று பொருட்களை வாங்கி சென்றனர். அவ்வாறு வந்தவர்களையும் போலீசார் அடையாள அட்டை உள்ளதா? என சரி பார்த்த பின்னரே அவர்களை அனுமதித்தனர்.