கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள 8 அம்மா உணவகங்களில் ஆதரவற்றோருக்கு ஊரடங்கு முடியும் வரை இலவசமாக 3 வேளையும் உணவு வழங்குவதற்காக கலெக்டர் கண்ணனிடம் மாவட்ட அ.தி. மு.க. சார்பில் ரூ.8 லட்சத்து 60 ஆயிரத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார். பின்பு அவர் பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது நடவடிக்கையின்பேரில் அனைத்து மாவட்டங்களிலும் ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுபாடின்றி கிடைத்து வருகிறது. மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு எடுத்த நடவடிக்கையினால் சமூக பரவல் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. ஆதரவற்றோருக்கு உணவு வழங்க முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளிலும் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்கள் மூலம் ஊரடங்கு முடியும் வரை 3 வேளையும் இலவசமாக உணவு வழங்குவதற்காக எனது பங்களிப்புடனும், அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்களிப்புடனும் ரூ.8 லட்சத்து 60 ஆயிரத்தை கலெக்டரிடம் வழங்கி உள்ளேன். இதன் மூலம் அம்மா உணவகங்களில் ஆதரவற்றோருக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும். மாவட்ட நிர்வாகத்துடன் அமைச்சர் என்ற முறையில் நானும், அனைத்து துறையினரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டதன்பேரில் நோய் தொற்று பரவாமல் இருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது இரவு 8.30 மணிக்கு நான் வந்தபோதும் கலெக்டரும், அதிகாரிகளும் தடுப்பு நடவடிக்கை பற்றி ஆய்வு நடத்தியபடி உள்ளனர். கலெக்டர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளின் செயல்பாடு பாராட்டுக்குரியது. அவர்களின் நடவடிக்கையால் இந்த மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள், காய்கறிகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் நிலை உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். இதைவிட வேறு உயர்வான வார்த்தை ஏதும் கிடையாது. கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என முதல்-அமைச்சரே தெரிவித்துள்ளார். எனவே இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் பாதுகாப்பை அரசு கவனித்து கொள்ளும்.ஆவின்பால் வினியோகம் முறையாக நடந்து வருகிறது. இதில் பிரச்சினை ஏதும் இல்லை. அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அப்படி ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது. எனினும் ஆவின்பால் வினியோகம் அனைத்து பகுதிகளிலும் முறையாக நடக்க உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையை பொறுத்தமட்டில் தமிழகம் முழுவதும் சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகமும், அரசுத்துறை அதிகாரிகளும் விழிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் நிறைவான செயல்பாடுகள் அதிகம் உள்ளன. அதை பாராட்ட மனம் இல்லா விட்டாலும் குறை சொல்ல வேண்டாம். கொரோனா தொற்றை தடுக்க இந்த மாவட்ட மக்கள் சமூக விலகலை கடைபிடித்து நோய் பரவாமல் இருக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.