தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது - கலெக்டர் வினய் எச்சரிக்கை

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று கலெக்டர் வினய் எச்சரித்துள்ளார்.

Update: 2020-04-22 22:45 GMT
மதுரை, 

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக மதுரை மாநகரில் நரிமேடு, மேலமடை, தபால்தந்தி நகர், மகபூப்பாளையம் ஜி.எஸ்.நகர், ஆனையூர், குப்புப்பிள்ளை தோப்பு தெரு, மதிச்சியம் மற்றும் மதுரை புறநகரில் சொக்கலிங்கபுரம், மேலூர் நகராட்சி, கல்லல்பட்டி, கரையிப்பட்டி, மாத்தூர், எழுமலை பேரூராட்சி, திருமங்கலம் நகராட்சி, உசிலம்பட்டி நகராட்சி, கீழமாத்தூர் ஆகிய பகுதிகள் உள்ளன. எனவே இந்த பகுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வேறு பகுதிகளுக்கு செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகள் முழுவதும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பகுதியில் உள்ள மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மளிகை பொருட்கள் அனைத்தும் டோர் டெலிவரி செய்யப்படுகிறது. அதே போல் அந்த பகுதிகளில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் போன் நம்பர்கள் அனைத்தும் நோட்டீசுகளாக ஒட்டப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் தன்னார்வலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி சார்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று கலெக்டர் வினய் எச்சரித்துள்ளார். அதாவது இந்த பகுதி மக்கள் மூலம் மற்ற பகுதிகளுக்கு கொரோனா பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்