ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென்னந்தோப்பில் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது - மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென்னந்தோப்பில் சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2020-04-22 22:45 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு ஒன்றில் சாராயம் காய்ச்சி வருவதாகவும், அங்கு சாராய ஊறல் இருப்பதாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபனுக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்த அவர் மதுவிலக்கு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பானுமதி, சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் கான்சாபுரம் குப்பான்குளம் கண்மாய் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கு சென்று சோதனை நடத்தினர். மதுவிலக்கு போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்தவர்கள் மின்னல் வேகத்தில் தப்பியோடி விட்டனர்.

ஆனால் 3 பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கினர். அந்த 3 பேரையும் கைது செய்து விசாரித்தபோது கான்சாபுரத்தை சேர்ந்த ராஜேஷ்(வயது 33), வெயில்முத்து(36), கூமாபட்டியை சேர்ந்த ராமர்(54) என்பது தெரியவந்தது. மேலும் தென்னந்தோப்பில் காய்ச்சி வைக்கப்பட்டிருந்த 5 லிட்டர் சாராயத்தையும், சாராயம் காய்ச்ச தயாராக இருந்த 250 லிட்டர் ஊறல் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்ளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய கூமாபட்டியை சேர்ந்த மச்சவளவன், சீனியப்பன், ஜெகதீசன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் கூறும்போது, சாராயம் தயாரிக்க பலசரக்கு கடைகளில் மூலப்பொருளான கடுக்காய் மற்றும் வெல்லம் உட்பட பல்வேறு பொருட்களை வழங்குவது தெரிந்தால் அந்த கடைக்காரர்கள் மீது குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்