சேலத்தில், தடை செய்யப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு பணி தீவிரம்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

சேலத்தில், தடை செய்யப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு பணியினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.;

Update: 2020-04-22 23:15 GMT
சேலம், 

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று நோய் உடையவர்களுடன் நேரடியாக அல்லது மறைமுகமாக தொடர்பில் இருந்தவர்கள் என கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளான 70 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தடை செய்யபட்ட பகுதிகளில் 3 வேளைகள் கிருமி நாசினி தெளிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களோடு மாநகராட்சி அலுவலர்கள் தினந்தோறும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவர்களது உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

இந்தநிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு பணி நடைபெற்றது. அந்த பணியை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அனைத்து தெருக்களிலும் கிருமி நாசினி தொடர்ந்து தெளிக்க வேண்டும் என்று மாநகராட்சி பணியாளர்களுக்கு ஆணையாளர் கேட்டுக்கொண்டார். மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் மூலம் மருந்துகள், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வீடு, வீடாக சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே இப்பகுதிகளிலுள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியில் செல்லாமல், மாநகராட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு, தங்களுக்கு தேவையான பொருட்களை வீடுகளுக்கே வரவழைத்து பெற்றுக்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்