கருமந்துறை வனப்பகுதியில் சாராயம் கடத்தி வந்த போலீஸ்காரர் உள்பட 8 பேர் கைது
கருமந்துறை வனப்பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்த போலீஸ்காரர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓமலூர்,
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தளவாய்ப்புதூர் ஊராட்சியில் உள்ள பூமரத்தூர், வீராட்சியூர், கள்ளப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் மலைக்கிராமங்களுக்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது பூமரத்தூரில் உள்ள ஒரு ஓடையில் 2 வாலிபர்கள் சாராயம் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் கன்னப்பாடியை சேர்ந்த ரமேஷ் (வயது 30), ஏற்காடு சொரக்காய்ப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல கருமந்துறை மலைப்பகுதியில் இருந்து சாராயம் கடத்தப்படுவதாக ஏத்தாப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் 20 லிட்டர் சாராயத்தை கடத்தி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர்கள் சேலம் வளையக்காரனூர் பகுதியை சேர்ந்த குமரேசன் (25) என்பதும் இவர் திருப்பூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் அவருடன் வந்தவர் கீதன் (24) என்பதும் இவர் என்ஜினீயரிங் மாணவர் எனவும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல கருமந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் விற்றதாக ரஞ்சித்குமார் (24), அழகேசன் (22), அய்யனார் (23), காந்திராஜன் (32) ஆகியோரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து தலா 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.