வாகன ஓட்டிகளிடம் தீவிர சோதனை: ஊரடங்கு மிக கடுமையாக்கப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் ஊரடங்கு மிகவும் கடுமையாக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-04-22 23:15 GMT
ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 70 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். முதல் கட்டமாக 1,258 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் விரைவான பரிசோதனை முகாம்கள் நேற்று முன்தினம் தொடங்கி உள்ளன. 18 பகுதிகளை சேர்ந்த சுமார் 32 ஆயிரம் குடும்பங்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் எடுத்து உள்ள தீவிர நடவடிக்கை காரணமாக நோய்த்தொற்றின் வேகம் குறைந்து உள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட 70 பேரில் பெரும்பாலானவர்கள் நோய் குணம் அடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை கடுமைப்படுத்தினால் மட்டுமே ஈரோடு மாவட்டத்தில் நோய்த்தொற்று முற்றிலும் இல்லாத நிலையை உருவாக்க முடியும் என்று மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. எனவே வாகன சோதனைகளை கடுமையாக்க மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டு உள்ளார்.

அவரே நேரடியாக வாகன சோதனைகளிலும் ஈடுபட்டு வருகிறார். மாவட்ட கலெக்டரின் அனுமதி இன்றி கார் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் ஓடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. எனவே மாநில எல்லைகளில் போடப்பட்டு இருக்கும் சோதனைச்சாவடிகளில் அண்டை மாவட்ட மக்கள் மருத்துவ சிகிச்சைக்கு கூட உரிய அனுமதி இன்றி வர முடியாத நிலை உள்ளது.

இதுபோல் அனுமதி பெற்ற வாகனங்களிலும் பயணம் செய்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறைகளுடன் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தநிலையில் நேற்று ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது.

பகல் 11 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் 11 மணிக்கு முன்னதாக அனைத்து வேலைகளையும் முடித்துக்கொண்டு வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 11 மணிக்கு மேல் சாலையில் வரும் அனைத்து வாகன ஓட்டிகளும் வாகன உரிமை புத்தகம், ஓட்டுனர் உரிமம், காப்பீட்டு ரசீது உள்ளிட்டவை இல்லாமல் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தேவையின்றி வாகனங்களில் வந்தாலோ, முகக்கவசம் அணியாமல் பயணம் செய்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர். நேற்று 11 மணிக்கு மேல் வந்த வாகனங்களை போலீசார் உரிமங்களை சோதனை செய்து அதன் பின்னரே அனுமதித்தனர். ஊரடங்கு முடியும் காலம் வரை இந்த விதிகள் கடுமையாக பின்பற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்