ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்து தவிக்கும் சலவை மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள்
ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்து சலவை மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.;
பெருந்துறை,
பெருந்துறை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். முடி திருத்தும் கடைகளில் வேலை செய்யும் இவர்கள் தினக்கூலியாக ரூ.500 முதல் ரூ.750 வரை பெறுகின்றனர். பெருந்துறை மட்டுமின்றி கரூர், திருச்சி, திண்டுக்கல் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பெருந்துறைக்கு குடும்பத்துடன் வந்து அங்குள்ள முடி திருத்தும் கடைகளில் தினக்கூலிக்கு வேலை செய்து வருகின்றனர்.
பெருந்துறை மற்றும் அதன் அருகே உள்ள சிப்காட்டில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள், சிகை அலங்காரம் செய்து கொள்ள பெருந்துறையில் உள்ள நவீன சிகை அலங்கார கடைகளை தேடி வருவார்கள். இதனால் பெருந்துறை நகர் மற்றும் பணிக்கம்பாளையம் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் இயங்கி வரும் நவீன சிகையலங்கார கடைகள் எப்போதும் மக்கள் கூட்டமாகவே காட்சியளிக்கும்.
கொரோனா தொற்று காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாத காலமாகிறது. இதுவரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாததால், உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து பெருந்துறையில் குடியேறிய முடி திருத்தும் தொழிலாளர்களால் தொழில் செய்ய முடியவில்லை. வாழ வழியின்றி தவித்து கொண்டிருக்கின்றனர்.
அவர்களது வாழ்வாதாரம் இப்போது கேள்விக்குறியாகி வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில், இவர்களுக்கு கடன் கொடுத்து உதவி செய்ய தெரிந்தவர்களும் யாருமில்லை. இதனால் அன்றாட செலவுகளுக்குக்கூட குடியிருக்கும் அக்கம் பக்கத்தினரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
“பெருந்துறையில் நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கையை சிறப்பாக ஓட்டலாம்” என்கிற நம்பிக்கையுடன் இந்த பகுதிக்கு வந்த வெளியூர் தொழிலாளர்கள் ஒரு சிலருக்கு, அவர்கள் பணிபுரியும் கடை உரிமையாளர்கள் மூலம், சிறிய அளவில் இப்போது உதவிகள் கிடைத்து வருகிறது. அதே சமயம், பெரும்பாலான வெளியூர் தொழிலாளர்களுக்கு இத்தகைய உதவிகள் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது. வாழ வந்த இடத்தில் சோற்றுக்கு வழியில்லை என்கிற போது சொந்த ஊருக்காவது போய்விடலாம் என்றால் 144 தடை உத்தரவு அவர்களை போக விடாமல் தடுத்து விட்டது.
இந்த ஊரடங்கு உத்தரவு எப்போது தளர்த்தப்படும்? ஒரு மாதமாக சிக்கி சீரழியும் தங்கள் வாழ்வாதாரம் எப்போது சீர்படும்? போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் பெருந்துறை பகுதியில் வசித்து வரும் வெளியூர் முடி திருத்தும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதே நிலைமை தான் பெருந்துறையில் வாழும் சலவை தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் வீடு வீடாக சென்று துணிகளை துவைப்பது மட்டுமின்றி அவைகளை சலவை செய்து கொடுத்தும் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
சலவை கடையில் வேலை செய்யும் தொழிலாளி ஒருவருக்கு, தினசரி கூலியாக ரூ.500 கிடைக்கிறது. மாதம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரம் வரை இவர்கள் கூலி பெற முடியும். ஆனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் இன்று வரை இவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல், வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். தினசரி உணவுக்காக, பிறரிடம் கடன் கேட்டு மன்றாடி வருகின்றனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க செயலாளர் சின்னசாமி கூறும்போது, ‘முடி திருத்தும் தொழிலாளர்கள் மற்றும் சலவை தொழிலாளர்கள் ஆகிய 2 பிரிவினரும், அரசு அறிவித்த அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் பிரிவில் வருகின்றனர். இவர்கள், தங்களது தொழில் முறை அடையாள அட்டைகளை, வருடம் தவறாது புதுப்பித்து இருந்தால் மட்டுமே, தற்போது அரசு வழங்கும் நிவாரண தொகையை பெற முடியும். அவ்வாறு முறையாக ஆண்டுதோறும் புதுப்பிக்காதவர்களுக்கும் கருணை அடிப்படையில் அரசு நிவாரண உதவி தொகையை வழங்க வேண்டும் என, சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்’ என்றார்.