சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடி சென்று வந்த 2 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடி சென்று வந்த 2 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் லெட்சுமியாபுரம் பகுதியை சேர்ந்த 2 பேர் ஒரு மோட்டார்சைக்கிளில் நேற்று முன்தினம் புளியங்குடியில் துக்க வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளனர்.
இதனை அறிந்த நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) முகைதீன்அப்துல்காதர் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் பாலசந்தர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் நேற்று அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கு தனிமைப்படுத்துதல் நோட்டீசை ஒட்டி அவர்களை தனிமைப்படுத்தினர். பின்னர் அவர்களது வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதி தீவிர கண்காணிப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புளியங்குடியில் இருந்து முள்ளிக்குளம் வழியாக சங்கரன்கோவிலுக்கு வரும் பிரதான சாலையை தவிர திருவேட்டநல்லூர், பாம்புக்கோவில் சந்தை, நொச்சிகுளம் வழித்தடம், புன்னையாபுரம், ராமசாமியாபுரம், வீரசிகாமணி வழித்தடம், சிந்தாமணி, சுப்பிரமணியபுரம், தாருகாபுரம், மலையடிக்குறிச்சி, அச்சம்பட்டி வழியாகவும் பாதை உள்ளது.
இந்த வழிகளில் அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் சிலர் வந்து செல்வதாகவும், எனவே போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
இதனிடையே சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடிக்கு செல்லும் பாதைகளில் பாதுகாப்பை தீவிரப்படுத்த அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் ஆலோனை கூட்டம் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. உதவி கலெக்டர் முருகசெல்வி, நகராட்சி ஆணையர் முகைதீன் அப்துல்காதர், சுகாதார அலுவலர் பாலசந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், சோதனை சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு 3 ஷிப்டுகளாக வருவாய் துறையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.