‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த தேன்கூடு அகற்றம்
‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக கொழுமம் அமராவதி ஆற்றுப்பாலத்தின் அடியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த தேன்கூடு அகற்றப்பட்டது.
மடத்துக்குளம்,
மடத்துக்குளம் அருகே கொழுமம் அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த கொழுமம் அமராவதி ஆற்று பாலத்தின் வழியாக பழனி, உடுமலை, மடத்துக்குளம் ஆகிய பகுதிகளுக்கு பயணம் செல்லும் முக்கிய சாலையாக உள்ளதாகவும், இந்த ஆற்று பாலத்தின் அடியில் பொதுமக்களை அச்சுறுத்தும் தேன்கூடு அமைந்து இருந்தது.
இதனால் இந்த தேன் கூடுகளில் இருந்து பறந்து வரும் தேனீக்களால் ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளை, தாக்கியதில் குமரலிங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக இதனை அகற்ற வேண்டும் என்றும் ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
இதனை அடுத்து கொழுமம் அமராவதி ஆற்றுப்பாலத்தின் அடியில் அச்சுறுத்தலாக உள்ள தேன் கூடுகளை அப்புறப்படுத்த குமரலிங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் அந்தோணியம்மாள், உடுமலை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஹரி நாராயணன் மற்றும் தீயணைப்பு பணியாளர்கள் ஆற்றுப்பாலத்தின் அடியில் கட்டியிருந்த தேன்கூடுகளை அப்புறப்படுத்தம் பணிகளை மேற்கொண்டனர்.
இதில் தொடர்ந்து 6 மணி நேர கடுமையான போராட்டத்திற்கு பிறகு தேன் கூடுகள் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. இதனால் கொழுமம் அமராவதி ஆற்றுப்பாலம் மீது செல்லும் பயணிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது. தேன்கூட்டை அகற்ற செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கு கொழுமம், குமரலிங்கம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.