அனைத்து ஊழியர்களுடன் இயங்கிய தபால் நிலையங்கள் - மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து ஊழியர்களுடன் தபால் நிலையங்கள் இயங்க தொடங்கியுள்ளன. இருப்பினும் மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.

Update: 2020-04-22 07:05 GMT
விழுப்புரம்,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் குறைந்த ஊழியர்களுடன் இயங்கி வந்தது.

இந்நிலையில் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி மத்திய அரசு அலுவலகங்கள் நூறு சதவீத ஊழியர்களுடன் நேற்று முன்தினம் முதல் இயங்க தொடங்கியுள்ளது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் தலைமை தபால் நிலையங்கள், செஞ்சி நிகர்நிலை தபால் நிலையம், 23 துணை தபால் நிலையங்கள், 100 கிளை தபால் நிலையங்கள் ஆகியவை வழக்கம்போல் அனைத்து ஊழியர்களுடன் முழுமையாக இயங்கி வருகிறது.

தபால் நிலையங்களில் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் முக கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்தபடி பணியில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் அன்றாட பணிகளில் வழக்கம்போல் ஈடுபட்டு வருகிற நிலையில் மருந்துகளை உடனுக்குடன் பட்டுவாடா செய்யவும், முதியோர் உதவித்தொகையை விரைந்து வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அந்த பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

மேலும் தபால் சேவையை பெற வருகை தரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக தபால் நிலையத்தினுள் 1 மீட்டர் இடைவெளியில் அடையாள குறிகள் போடப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக தபால் சேவையை பெற பொதுமக்களின் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இதன் காரணமாக தபால் நிலையங்கள் வெறிச்சோடிய நிலையில் காட்சியளித்தன. இதேபோல் எல்.ஐ.சி. அலுவலகங்கள், பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களும் வழக்கம்போல் அனைத்து ஊழியர்களுடன் இயங்க தொடங்கியுள்ளது.

மேலும் செய்திகள்