மாவட்டத்தில், வெறிச்சோடி கிடக்கும் பத்திரப்பதிவு அலுவலகங்கள்

கடலூர் மாவட்டத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2020-04-22 07:05 GMT
கடலூர்,

ஊரடங்கு அமல் காரணமாக, பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படாமல் இருந்தன. இந்த நிலையில் 20-ந்தேதி(நேற்று முன்தினம்) முதல் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட தொடங்கியது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பாதுகாப்பு கவச உடை மற்றும் முக கவசம் அணிந்து பணி புரிந்து வருவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் நேற்று திறந்து இருந்தது. குறைந்த எண்ணிக்கையிலேயே பணியாளர்கள் அமர்ந்திருந்தனர். ஆனால் பத்திரப்பதிவு செய்ய பொதுமக்கள் யாரும் வராததால் அலுவலக வளாகம் வெறிச்சோடிக் கிடந்தது. இதனால் ஊழியர்கள் மட்டும் அவரவர் இருக்கையில் அமர்ந்து அலுவலகப் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பத்திரப்பதிவு எழுத்தர்கள் வருகிற 3-ந் தேதி வரையிலும் எந்த ஒரு பத்திரமும் எழுதுவதில்லை, அலுவலகங்களையும் திறப்பது இல்லை என முடிவு செய்துள்ளனர். பொது மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலையில், பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு விடுமுறையை அறிவித்து விட்டால் அது அங்கு பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

இதேபோல் புதுப்பேட்டையில் பத்திரப்பதிவு அலுவலகம் திறந்து இயங்கி வருகிறது. நேற்று பத்திரப்பதிவு செய்ய யாரும் வராததால் மக்கள் நடமாட்டம் இன்றி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதே நிலை தான் மாவட்டம் முழுவதிலும் நீடித்தது.

மேலும் செய்திகள்