பண்ருட்டி பகுதி, முந்திரிதோப்புகளில் இரவு, பகலாக சாராயம் காய்ச்சும் கும்பல் - கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
பண்ருட்டி பகுதி முந்திரிதோப்புகளில் இரவு, பகலாக மர்ம கும்பல் சாராயம் காய்ச்சி வருகிறது. இந்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
பண்ருட்டி,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து மதுபிரியர்கள், மதுகிடைக்காமல் கடும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். ஒருசிலர், சாராயத்தை தேடி குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் சாராயம் காய்ச்சும் சம்பவமும் தற்போது நடந்து வருகிறது.
பண்ருட்டி முந்திரி தோப்புகள் நிறைந்த பகுதியாகும். இந்த தோப்புகளுக்குள் புதுச்சேரி மாநில சாராயம் கடத்தி வரப்பட்டு விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இதுபற்றி அறிந்த மதுபிரியர்களும் தோப்புக்குள் சென்று சாராயத்தை குடித்துவிட்டு போதையில் மிதந்து வருகிறார்கள். 100 மில்லி சாராயம் ரூ.150-க்கும், ஒரு லிட்டர் ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் சில இடங்களில் அங்கேயே சாராயத்தை காய்ச்சி உடனுக்குடன் வழங்கி குடிபிரியர்களை குஷிப்படுத்தி வருகிறார்கள் சில சாராய வியாபாரிகள்.
இதுபற்றி போலீசாருக்கு புகார்கள் சென்றதை அடுத்து, காடாம்புலியூர் போலீசார் சிறுதொண்டமாதேவி கிராமத்தில் உள்ள முந்திரி தோப்புகுள் புகுந்து சோதனை செய்தனர். அங்கு அய்யப்பன் என்பவர் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த நிலையில், கையும் களவுமாக போலீஸ் வசம் சிக்கினார். மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய சிறுதொண்டமாதேவியை சேர்ந்த ராமமூர்த்தி, அறிவழகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
மேலும் அதே பகுதியை சேர்ந்த தங்கவேல், நந்தகோபால், பழனியம்மாள் ஆகியோர் முந்திரிதோப்பில் சாராயம் காய்ச்சினர். இங்கு போலீசார் அதிரடி வேட்டைக்கு சென்ற போது, தங்கவேல் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மேல்மாம்பட்டில் சாராயம் காய்ச்சிய பாலமுருகன், பூவராகமூர்த்தியும் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு, வேலங்குப்பத்தில் சாராயம் காய்ச்சிய ராமலிங்கம், ஞானவேல் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி உட்கோட்டத்தை பொறுத்தவரைக்கும் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு, புதுப்பேட்டை, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் ஆகிய போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில் பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட செட்டிப்பட்டறை, கீழ்கவரப்பட்டு, புலவனூர், எல்.என்.புரம், திருவதிகை, திராசு, கண்டரக்கோட்டை, ராஜாப்பாளையம், தட்டாஞ்சாவடி, கந்தன்பாளையம், விழமங்கலம், வி.ஆண்டிக்குப்பம், ஏ.ஆண்டிக்குப்பம் ஆகிய இடங்களில் சாராய பாக்கெட்டுகள் விற்பனை அதிகளவில் நடக்கிறது. அதேபோல் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட புதுப்பேட்டை, ஒறையூர், ஆனத்தூர், நத்தம், கரும்பூர், பனப்பாக்கம், சேமக்கோட்டை, ஏரிப்பாளையம், அருங்குணம், பொன்னன்குப்பம் ஆகிய இடங்களிலும் சாராயம் விற்பனை கொடிகட்டி பறக்கும் அளவுக்கு நடைபெறுவதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
மேலும், காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் முந்திரிதோப்புகளில் சாராயம் காய்ச்சும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. குறிப்பாக சிறுதொண்டமாதேவி, சாத்திப்பாட்டு, கருக்கை, செம்மேடு, விசூர், முத்தாண்டிக்குப்பம், புலவன்குப்பம், வல்லம் ஆகிய இடங்களில் இந்த பணியில் சில கும்பல் ரகசியமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பண்ருட்டியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாராயம் குடித்ததில் 58 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது கண்பார்வையையும் இழந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் திரும்பவும் நடைபெறாமல் தடுக்கும் விதமாக போலீசார் துரிதமாக செயல்பட்டு சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.