மாவட்டம் முழுவதும் 1,700 பேருக்கு வீட்டு கண்காணிப்பில் சிகிச்சை
மாவட்டம் முழுவதும் 1,700 பேருக்கு வீட்டு கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்படுவதாக கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட பேரிடர் மேலாண்மைக்குழு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் நளினி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் 1,700 பேருக்கு வீட்டு கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நோய் தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் மக்கள் தேவையின்றி வெளியே வராத வகையில் கண்காணிக்கப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், தொடர்பில் இருந்தவர்கள், சுவாசக்கோளாறு உள்ளவர்களுக்கு ரேபிட் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு காய்கறிகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 161 வாகனங்களில் காய்கறி விற்பனை செய்யப்படுகிறது.
இதுதவிர மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இறைச்சி கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதேபோல் சந்தைகள், கடைகளில் மக்கள் சமுதாய இடைவெளியை கடைபிடிப்பது உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.