சம்பளம் வழங்கக்கோரி கரூர் அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
சம்பளம் வழங்கக்கோரி கரூர் அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
சம்பளம் வழங்கக்கோரி கரூர் அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்த தொழிலாளர்கள்
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி கிராமம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கரூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சிலர் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள், எலக்ட்ரீசியன், தச்சர், பிட்டர் என சுமார் 260 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஒப்பந்த காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இந்த மாதம் வேறொரு தனியார் நிறுவனம் ஒப்பந்த காலத்தை ஏற்று நடத்துகிறது.
போராட்டம்
இந்தநிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, கடந்த மாதச்சம்பளம், சேம நல நிதி ஆகியவை இன்று வரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் கூறி பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் மருத்துவர்களே வர அச்சமடையும் பகுதியில் துப்புரவு பணிகளை செய்யும் எங்களுக்கு மருத்துவமனை உணவகத்தில் செவிலியர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வித்தியாசப்படுத்தி காட்டுவதாக குற்றம் சாட்டியதுடன் பணிகளை புறக்கணித்து சமூக இடைவெளி விட்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டதையடுத்து அவர்களிடம் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினரும், தனியார் ஒப்பந்ததார மேலாளரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்று, பணியை தொடங்கினர்.
இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.