கோவையில் பெண் போலீஸ் ஏட்டுக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்வு

கோவையில் பெண் போலீஸ் ஏட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்து உள்ளது.;

Update:2020-04-22 04:30 IST
கோவை,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் போலீசாருக்கு கொரோனோ தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே போலீசாருக்கு அவ்வப்போது உடல் பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் அன்னூர்-அவினாசி ரோடு கஞ்சப்பள்ளி சோதனைச்சாவடியில் பணிபுரிந்த 39 வயது பெண் போலீஸ் ஏட்டுக்கு காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்டது. இதனால் அவரின் ரத்தம், சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதன்மூலம் கோவையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்து உள்ளது.

அன்னூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த பெண் போலீஸ் ஏட்டுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடன் பணிபுரிந்த சுகாதாரத்துறை ஊழியர்கள், டாக்டர்கள், போலீசார், அவர்களின் குடும்பத்தினர், பெண் போலீசின் குடும்பத்தினர் மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு நேற்று அன்னூர் போலீஸ் நிலையத்தில் வைத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இதுவரை 120-க்கும் மேற்பட்டோருக்கு சோதனை செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனா அறிகுறி தெரியவில்லை என்று சுகாதார துறையினர் தெரிவித்து உள்ளனர். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட பெண் போலீஸ் ஏட்டுவின் குடும்பத்தை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர், மதுக்கரை, கே.ஜி.சாவடி, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை உள்பட பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை, ரோந்து பணிகளில் ஈடுபடும் 386 போலீசாரின் ரத்தம், சளி ஆகியவை மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெறுகிறது. அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று ரெயில்வே போலீசாருக்கும் கோவை ரெயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

இது குறித்து சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அன்னூர் சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் ஏட்டு உள்ளிட்ட போலீசாருக்கு ரத்த, சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பெண் போலீஸ் ஏட்டுக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே அன்னூர் போலீஸ் நிலையத்தில் அவருடன் பணிபுரியும் அனைத்து போலீசாருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. கோவையில் கடந்த மாதம் 22-ந் தேதி கோவை சாய்பாபாகாலனியை சேர்ந்த 25 வயது கல்லூரி மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பி விட்டார்.

அதைத்தொடர்ந்து ஏப்ரல் 1-ந் தேதி மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 28 பேரும் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் ஆவர். இதையடுத்து கடந்த 13-ந் தேதி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்தது. 14-ந் தேதி மற்றும் 15-ந் தேதி யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. 19-ந் தேதி பச்சிளம் குழந்தை உள்பட 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது பெண் போலீஸ் ஏட்டுக்கு கொரோனா வைரஸ் உறுதியானதால் கோவையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்து உள்ளது. இன்று (அதாவது நேற்று) ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் 35 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 24 பேர் பெண்கள், 11 பேர் ஆண்கள் ஆவர்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்