நாகை மாவட்டத்தில் 245 குடும்பத்தினர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு கலெக்டர் பிரவீன்நாயர் தகவல்

நாகை மாவட்டத்தில் 245 குடும்பத்தினர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் பிரவீன்நாயர் கூறி உள்ளார்.

Update: 2020-04-22 00:53 GMT
நாகப்பட்டினம், 

நாகை மாவட்டத்தில் 245 குடும்பத்தினர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் பிரவீன்நாயர் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரத்த மாதிரி பரிசோதனை

நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 976 பேரின் ரத்த மாதிரிகள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் இதுவரை 44 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 444 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

490 பேரின் பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வசிப்பிடங்களாக மாவட்டம் முழுவதும் 12 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அத்தியாவசியமான பொருட்கள் வீட்டுக்கு சென்று வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தி கண்காணிப்பு

மாவட்டத்தில் 3,122 குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு 28 நாட்கள் முடிந்து விட்டது. தற்போதைய நிலவரப்படி 245 குடும்பத்தினர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 67 ஆயிரத்து 81 ரேஷன்கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ரூ.100 விலை கொண்ட காய்கறி தொகுப்புகள் வேளாண்மை துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

16 பேருக்கு தொற்று இல்லை

நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர், மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கொரோனா வார்டுக்கு நேரில் வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட 16 பேருக்கும் பழங்கள் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.அதன்பின்னர் அவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் தங்களது வீட்டுக்கு சென்றனர். தற்போது மீதமுள்ள 31 பேர் கொரோனா வார்டில் உள்ளனர்.

மேலும் செய்திகள்