கூடுதல் விலைக்கு உரம் விற்ற 27 கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை

தஞ்சை மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்த 27 கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2020-04-21 23:41 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்த 27 கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் ஆய்வு

தஞ்சை மாவட்டத்தில் கோடை நெல், உளுந்து, பருத்தி, கரும்பு ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மேலும் குறுவை நெல் நடவுப்பணிகளும் தொடங்கி உள்ளன. மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் தேவைக்கேற்ப அனைத்து உரங்களும் பெறப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. உரத்தேவை, இருப்பு மற்றும் விற்பனை விவரங்கள் தினமும் கண்காணிக்கப்பட்டு தேவைக்கேற்ப உரங்கள், தேவைப்படும் இடங்களுக்கு கையிருப்பில் இருந்து மாற்றம் செய்து அளிக்கப்படுகிறது.

தற்போது மாவட்டத்தில் யூரியா 5,208 டன், டி.ஏ.பி 4,097 டன், பொட்டாஷ் 2,979 டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 4,238 டன் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன. அதன் பேரில் வேளாண்மை துணை இயக்குனர் (உரங்கள்) அமுதன் தலைமையில் சிறப்புக்குழு தஞ்சை மாவட்டத்தில், பூதலூர், ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வட்டாரங்களில் உள்ள உரக்கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், உதவி இயக்குனர் சாருமி ஆகியோர் உடன் இருந்தனர்.

27 கடைகள் மீது நடவடிக்கை

அப்போது விற்பனை முனைய கருவி மூலம் உரம் விற்பனை செய்வதை உறுதி செய்தல், உரங்களின் இருப்பு விலைப்பட்டியல் தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ள விவரம், விற்பனை உரிமம், அனுமதி பெறப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டும் கொள்முதல் செய்தல் உர இருப்பு ஆகியவற்றையும் சரிபார்த்தனர்.

அப்போது கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்த 27 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் உரங்களை அதிகபட்ச விலைக்கு மேல் விற்பனை செய்தாலும், உரக்கட்டுப்பாட்டு சட்டம் நடைமுறைகளை கடைபிடிக்க தவறினாலும்் மற்றும் கொரோனா முன்னேற்பாடு நடைமுறைகளை பின்பற்றாமல் உரங்களை விற்பனை செய்தாலும் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்