சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள்; கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தொடர்பான கண்காணிப்பு அலுவலராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனரும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான காமராஜ் மற்றும் பொருளாதார குற்றவியல் பிரிவு போலீஸ் ஐ.ஜி. முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் ராஜகோபால், வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைதொடர்ந்து கண்கணிப்பு அலுவலர் காமராஜ் திருக்கோஷ்டியூர் ரேஷன் கடையில் ஆய்வு செய்தார். மேலும் அங்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என்று பார்வையிட்டார். இதையடுத்து காரைக்குடியில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பகுதி என கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்ட மீனாட்சிபுரம் பகுதிக்கு சென்று அங்குள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கப் பெறுகிறதா என ஆய்வு செய்தார்.