மும்பையில் புதிதாக 355 பேருக்கு தொற்று: மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது - 251 பேர் பலி

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது. 251 பேர் உயிரிழந்து உள்ளனர். மும்பையில் புதிதாக 355 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-04-21 23:20 GMT
மும்பை, 

மராட்டிய மாநிலத்தில் தான் நாட்டிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நேற்று மாநிலத்தில் புதிதாக 522 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 5 ஆயிரத்து 218 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்து இருக்கிறது.

மாநில தலைநகர் மும்பையில் புதிதாக 355 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் 219 பேருக்கு கடந்த 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரையிலான காலத்தில் பல்வேறு ஆய்வகங்கள் மூலம் கொரோனா இருப்பதாக கண்டறியப்பட்டு, அது பற்றிய விவரங்கள் தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளன.

இதனால் மும்பையில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 445 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் மும்பையில் 12 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 150 ஆக அதிகரித்து உள்ளது. புதிதாக 12 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் வீடு திரும்பியோர் எண்ணிக்கை 408 ஆக உயர்ந்து இருக்கிறது.

தாராவி

மும்பை தாராவியில் தொற்று நோய் அசுர வேகத்தில் பரவி வருகிறது. தாராவியில் கடந்த 1-ந் தேதி முதன் முதலாக 56 வயது துணிக்கடைக்காரர் கொரோனாவுக்கு பலியானார். அவரை தொடர்ந்து இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் வரை தாராவியில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று மேலும் 12 பேருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்தது.

இதில் 5 பேர் ராஜூவ் காந்தி நகர் பகுதியையும், 4 பேர் முஸ்லிம் நகரையும் சேர்ந்தவர்கள். 2 வயது சிறுவன் உள்பட 2 பேர் மதினா நகரையும், ஒருவர் முகுந்த் நகரையும் சேர்ந்தவர். இதனால் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்து உள்ளது.

இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முகுந்த் நகரை சேர்ந்த 62 வயது நபர் பலியானார். ஏற்கனவே தாராவியில் தமிழ் மூதாட்டி உள்பட 11 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இந்தநிலையில் இந்த எண்ணிக்கை தற்போது 12 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்