தடை செய்யப்பட்ட இடத்தில் இருந்து 2 கி.மீ சுற்றளவுக்குட்பட்ட பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்க தடை - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
தடை செய்யப்பட்ட இடத்தில் இருந்து 2 கி.மீ சுற்றளவுக்குட்பட்ட பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்க தடை செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஊரடங்கு உத்தரவால் வேலை வாய்ப்பின்றி உள்ள தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றன. அவ்வாறு உதவிகள் வழங்கும் போது கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முககவசம், கையுறை மற்றும் சமூக இடைவெளியுடன் வழங்குவது அவசியமாகிறது.
உணவு பொருட்களை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு வழிக்காட்டுதல்களை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியால் தடை செய்யப்பட்ட பகுதிகள், அரசு பொது மருத்துவமனைகள், மாநகராட்சி சுகாதார மையங்கள், கொரோனா தொற்று நோய் பரிசோதனை மையங்கள் மற்றும் தொற்று நோய் சிகிச்சை வழங்க அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் போன்ற பகுதிகளுக்கு அருகிலுள்ள 2 கி.மீ. சுற்றளவுக்குட்பட்ட இடங்களில் நிவாரண பொருட்கள், உணவு வழங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் உணவு வழங்க வேண்டுமென்றால் பெருநகர சென்னை மாநகராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிடங்குகளில் உணவு பொருட்களை அளிக்க வேண்டும். பெறப்படும் உணவுப் பொருட்கள் முறையான உணவு பரிசோதனை மேற்கண்ட பின் மாநகராட்சி மூலம் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.