திருவாரூர் நகராட்சியில், தடை செய்யப்பட்ட பகுதிகளில் தன்னலமற்று பணியாற்றும் தூய்மை பணியாளர்கள்

திருவாரூர் நகராட்சியில், தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் தன்னலமற்று தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

Update: 2020-04-21 22:45 GMT
திருவாரூர், 

திருவாரூர் நகராட்சியில், தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் தன்னலமற்று தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

உயிர் காக்கும் சேவை

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த ஒரு டாக்டர் அந்ந நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உடலை அடக்கம் செய்ய கூட அனுமதிக்காமல் பொதுமக்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் உயிர் காக்கும் சேவை பணியினை செய்ய டாக்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட பகுதி

இந்த நிலையில் திருவாரூர் நகராட்சியில் 30 வார்டுகளில் சுமார் 62 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இதில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் 143 பேர் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தாக்கத்தில் 2 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் வசிக்கும் வண்டிக்கார தெரு, ஐந்நூற்று பிள்ளையார் கோவில் வடக்கு தெரு ஆகிய பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மை பணி

கொரோனாவிற்கு அனைவரும் அஞ்சுகின்ற நிலையில் தடை செய்யப்பட்ட பகுதியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு முக கவசம், கையுறை, கவச உடை போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அச்சமின்றி தங்களது பணியினை தன்னலமற்று சிறப்பாக செய்து வருகின்றனர். வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரித்து, தெருக்களில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

மருத்துவ பரிசோதனை

இதுகுறித்து நகராட்சி ஆணையர் சங்கரன் கூறியதாவது:-

திருவாரூர் நகரில் தூய்மை பணியாளர்கள், ஆய்வாளர்கள் என 200 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட பகுதியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கவச உடை, முக கவசம், கையுறை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த உடைகள் பாதுகாப்பு கருதி எரிக்கப்படுகிறது.

மேலும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. எந்தவித நோய் தொற்று ஏற்படாமல் இருக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாள்தோறும் கிருமி நாசினி தெளித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே நடமாடுவதை தவிர்த்தால் நிச்சயம் பாதிப்புகளை தடுக்க முடியும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தனியாக 6 அடி குழி தோண்டி புதைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரேனாவின் தாக்கத்தை பற்றி சிறிதும் கவலைப்படாமல் தன்னலமற்று தூய்மை பணியினை சிரத்தையுடன் மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்