ஊரடங்கால் விற்பனை செய்ய முடியவில்லை: மிளகாய்க்கு கொள்முதல் நிலையம் வேண்டும் - விவசாயிகள் வேண்டுகோள்
ஊரடங்கு உத்தரவு காரணமாக இளையான்குடி பகுதியில் மிளகாய் விவசாயம் பாதிப்படைந்துள்ளது. அறுவடையான மிளகாயை விற்பனை செய்ய கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளையான்குடி,
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்கள் வறண்ட பகுதி ஆகும். இந்த நிலையில் கோடைக்கால பயிராக விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் தங்களது நிலங்களில் மிளகாய் பயிரிட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மிளகாய் வியாபாரிகள் இங்கு நேரடியாக வந்து விவசாயிகளிடம் மொத்த விலைக்கு மிளகாய்களை கொள்முதல் செய்வது வழக்கம். இவ்வாறு இளையான்குடி, சாலைக்கிராமம், சூராணம், கண்ணமங்கலம், தாயமங்கலம் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மிளகாய் பயிரிட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பித்த நிலையில் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் மிளகாய் செடியிலேயே அழுகி வருகிறது. இதுதவிர பறித்த மிளகாய்களை சில விவசாயிகள் வத்தலாக மாற்றுவதற்காக காய வைத்து பக்குவப்படுத்தினாலும், அவற்றை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மிளகாய் விவசாயிகள் சிலர் கூறியதாவது:-
தற்போது ஊரடங்கு காரணமாக மிளகாயை நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் மன வேதனையில் உள்ளோம். இளையான்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் கடந்த ஆண்டு பெய்த நல்ல மழையால் அப்போது மிளகாய் பயிர் தண்ணீரில் மூழ்கி அழிந்து விட்டது. இந்த முறை பயிரிடப்பட்ட மிளகாய், அறுவடைக்கு தயாராக இருந்த வேளையில் ஊரடங்கினால் பறிக்காமல் விடப்பட்டு அழுகி வருகிறது.
ஆண்டுதோறும் வரும் வெளிமாவட்ட வியாபாரிகள் தற்போது மிளகாய் வாங்க வரவில்லை. இதனால் விற்பனைக்காக பறித்து வைக்கப்பட்ட மிளகாய்களை காய வைக்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளோம். இந்த மிளகாய் விவசாயத்தை நம்பி இப்பகுதி விவசாயிகள் ஆயிரக்கணக்கில் கடன் பெற்று அதனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ளோம்.
பொதுவாக இந்த பகுதியில் விளையும் நெல்லுக்கு விலை நிர்ணயிக்க அரசு கொள்முதல் நிலையம் அமைத்தது போன்று மிளகாய்க்கும் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். அப்போது தான் இவ்வாறு கஷ்டமான கால கட்டத்தில் மிளகாய் பயிரிட்ட விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை இருக்காது. எனவே இந்த பகுதியில் மிளகாய்க்கு அரசு கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.