‘ரேபிட் டெஸ்ட் கிட்’ பரிசோதனை ஈரோட்டில் நடந்தது - யாருக்கும் நோய்த்தொற்று அறிகுறி இல்லை

கொரோனா வைரஸ் தொற்றினை உடனடியாக கண்டறியும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்‘ பரிசோதனை ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் யாருக்கும் நோய்த்தொற்று அறிகுறி கண்டறியப்படவில்லை.

Update: 2020-04-21 23:30 GMT
ஈரோடு, 

உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் இருக்கிறதா? என்பதை கண்டறிய பல்வேறு சோதனைகள் உள்ளன. தமிழகத்தில் பரிசோதனைக்கூடத்தில் செய்யப்படும் சோதனையின் முடிவுகள் வர 24 மணி நேரத்துக்கும் அதிகம் ஆகிறது. அது உறுதி செய்யப்படும் நடைமுறைகள் முடியும்போது பாதிக்கப்பட்டவருக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் நிலை இருக்கிறது. எனவே விரைந்து தொற்றினை கண்டறியும் வகையில் ‘ரேபிட் டெஸ்ட் கிட்‘ அதாவது விரைந்து நோய் கண்டறியும் கருவிகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. ஈரோடு மாவட்டத்துக்கு 1,500 பரிசோதனை ‘கிட்’ கள் வந்தன.

அதைத்தொடர்ந்து நேற்று பரிசோதனை தொடங்கியது. ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பணியை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. தென்னரசு, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், மாநகர நல அதிகாரி டாக்டர் முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘ரேபிட் டெஸ்ட் கிட்‘ பரிசோதனை கருவியில் ரத்த துளிகள் சேகரித்து வைத்து பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று மதியம் வரை நடந்த சோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று அறிகுறி கண்டறியப்படவில்லை. தொடர்ந்து மாலைவரை சோதனை நடந்தது. 1,500 ‘ரேபிட் டெஸ்ட் கிட்‘ இருப்பதால் அதற்கு தகுந்தபடி, முன்னுரிமை அடிப்படையில் பரிசோதனைக்கு நபர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

குறிப்பாக ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருபவர்கள், அவர்களின் உறவினர்கள், நெருங்கிப்பழகியவர்கள் என்று அவர்களுக்கு தொடர்பு உடையவர்கள் பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரும் இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

முன்னதாக கொரோனா பரிசோதனைக்கு வந்த பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நாற்காலிகளில் அமர்ந்து இருந்தனர்.

மேலும் செய்திகள்