நிவாரணத்தொகை பெற்று தருவதாக கூறும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் கே.பி.அன்பழகன் எச்சரிக்கை

கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை பெற்று தருவதாக கூறும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-04-21 23:30 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பந்தாரஅள்ளி, அடிலம், அளேதர்மபுரி, எ.ஜெட்டிஅள்ளி, இலக்கியம்பட்டி ஆகிய இடங்களில் கட்டுமானம் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பயனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், நிவாரணத் தொகை மற்றும் நிவாரண பொருட்கள் பெற்று தருவதாக கூறும் இடைத்தரகர்கள் யாரையும் தொழிலாளர்கள் அணுக கூடாது. நிவாரணத்தொகை பெற்று தருவதாக கூறும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தர்மபுரி மாவட்ட மக்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் மே மாதம் 3-ந்தேதி வரை சமூக இடைவெளியை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ், தொழிலாளர் உதவி ஆணையர் இந்தியா, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், நுகர்வோர் பண்டக சாலை தலைவர் பூக்கடை ரவி, கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் பொன்னுவேல், ஒன்றியக்குழு தலைவர்கள் மகேஸ்வரி பெரியசாமி, நீலாபுரம் செல்வம் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்