திருப்பூர் தெற்கு தொகுதியில் 10 ஆயிரம் குடும்பத்தினருக்கு உணவுப்பொருட்கள் - அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருப்பூர் தெற்கு தொகுதியில் 10 ஆயிரம் குடும்பத்தினருக்கு அரிசிமூட்டை, பருப்பு மற்றும் 16 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.

Update: 2020-04-21 22:30 GMT
திருப்பூர்,

திருப்பூர் தெற்கு தொகுதி குணசேகரன் எம்.எல்.ஏ. தனது ஏற்பாட்டில் தனது தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சியின் 21 வார்டுகளில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்க முடிவு செய்தார். அதன்படி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு காலத்தில் உணவுப்பொருட்களுக்கு மிகவும் சிரமப்படுபவர்களை ஒவ்வொரு வார்டிலும் கண்டறியப்பட்டது. மொத்தம் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.65 லட்சம் மதிப்பிலான 10 ஆயிரம் அரிசிமூட்டை, பருப்பு மற்றும் 16 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.

இந்த நிவாரண உணவுப்பொருட்களை வார்டு வாரியாக வாகனங்களில் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குணசேகரன் எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உணவுப்பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார். 

21 வார்டுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் மூலமாக 10 ஆயிரம் ஏழை, எளிய குடும்பத்தினரிடம் வினியோகம் செய்யப்பட்டது. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்