திருப்பூர் மாவட்டத்தில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிக்கு அனுமதி ரத்து - கலெக்டர் உத்தரவு
திருப்பூர் மாவட்டத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்து கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார். ஊரடங்கு முடியும் வரை பணியை மேற்கொள்ளக்கூடாது என்று அறிவித்துள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், பல்லடம் மற்றும் காங்கேயம் தாலுகாக்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க பவர் கிரிட் நிறுவனத்தின் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கோரியது. இந்த கடிதத்தின் அடிப்படையில் மேற்படி உயர்மின் கோபுரம் கட்டுமான பணிக்கு நிலுவை பணிகளை தொடர்வதற்கு திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் கடந்த 16-ந்தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இந்த பணியை செய்யும் நிறுவன பணியாளர்கள் உரிய சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த அனுமதியை பயன்படுத்தி பவர்கிரிட் நிறுவனத்தினர் மேற்கண்ட பகுதிகளில் பணி செய்வதற்கு ஒரு டிராக்டர் வாகனத்தில் ஏராளமான பிற மாநில தொழிலாளர்களை அழைத்து வந்திருந்தனர். இந்த விவரம் கிராமப்புற விவசாயிகளுக்கு தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சமூக ஊடகங்களில் படங்கள் வெளியானது. இதற்கு விவசாயிகள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பவர் கிரிட் நிறுவனம் மேற்கொள்ளும் உயர் மின்கோபுரம் பணியை நிறுத்தி வைத்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பவர் கிரிட் நிறுவனம் மேற்கொள்ளும் கட்டுமானப்பணியில் உரிய சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது என தெரியவருவதால் அனுமதி வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஊரடங்கு காலம் முடியும் வரை எந்தவித பணியும் மேற்கொள்ளக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.