நெல்லையில் சமூக விலகலை 100 சதவீதம் கடைபிடிக்க காய்கறி-இறைச்சிக்கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடல் - மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சமூக விலகலை 100 சதவீதம் கடைபிடிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் காய்கறி, இறைச்சிக்கடைகள் மூடப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.;

Update: 2020-04-21 23:00 GMT
நெல்லை, 

இதுகுறித்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலினை முற்றிலும் தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நெல்லை மாநகராட்சியின் சார்பாக மாநகராட்சிக்குட்பட்ட 55 வார்டுகளிலும், மத்திய மற்றும் மாநில அரசு பிறப்பித்துள்ள 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு போர்க் கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமூக இடைவெளியை மையமாக வைத்து, பொதுமக்கள் அதிகமாக கூட்டம் கூடுவதை தடுக்க பொதுமக்களுக்கு அன்றாடம் அத்தியாவசியமாக தேவைப்படும் மளிகைப்பொருட்களை வீடு தேடி வழங்குவதற்கான ஏற்பாடுகளையும், உழவர் சந்தைகள் மற்றும் மாநகராட்சி, தினசரி காய்கறி சந்தைகளை பரவலாக அமைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

மேலும் அம்மா உணவகம், இறைச்சி கடைகள் ஆகியவற்றில் சமூக விலகலைப் பின்பற்றவும் மாநகராட்சி அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமூக விலகலைப் பின்பற்றும் விதமாக, அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் செல்லும் பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக, மாநகரில் 3 விதமான வண்ண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 

இதில் பச்சை வண்ண அட்டையின்படி திங்கள், வியாழன், நீல வண்ண அட்டையின்படி செவ்வாய், வெள்ளி, இளஞ்சிவப்பு வண்ண அட்டையின்படி புதன், சனி ஆகிய கிழமைகளை பயன்படுத்திக்கொள்ள மக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காய்கறி, இறைச்சிக்கடைகள் மூடல்

நெல்லை மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் சமூக விலகலை 100 சதவீதம் பொதுமக்கள் கடைபிடிக்கும் பொருட்டு, வருகிற 26-ந்தேதியும், 3-ந்தேதியும் (ஞாயிற்றுக்கிழமைகள்) நெல்லை மாநகராட்சி பகுதியில் தற்காலிகமாக அங்கீகரிக்கப்பட்ட கடைகள் அனைத்தும் முழுமையாக மூடப்படும். எனவே, மருந்து கடைகள் மற்றும் மருத்துவமனைகள் தவிர எவ்வித காரணத்திற்காகவும் இந்த நாட்களில் மற்ற கடைகள் மற்றும் காய்கறி, இறைச்சிக்கடைகளையும் மூட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அத்துடன், இந்த 2 நாட்களும் அத்தியாவசிய பொருட்களோ, வேறு ஏதேனும் காரணங்களுக் காகவோ அன்றைய தினங்களில் பொதுமக்கள், சிறு, குறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறாமல் நெல்லை மாநகரம் 100 சதவீதம் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்