ஊரடங்கை மீறி கிருமாம்பாக்கத்தில் கடைகள் திறப்பு - ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை
ஊரடங்கை மீறி கிருமாம்பாக்கத்தில் திறக்கப்பட்ட கடைகளை அடைக்குமாறு போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர்.
பாகூர்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற மே 3-ந் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி, விவசாயம், கட்டுமானம், மீன்பிடித்தல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி புதுவை கிராமப்புறங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு சில தொழிற்சாலைகள் நேற்று முதல் இயங்கின. மத்திய அரசின் உத்தரவை தவறாக புரிந்துகொண்டு கிருமாம்பாக்கத்தில் மெக்கானிக் கடைகள், செல்போன் பழுதுபார்க்கும் கடைகள் உள்பட பல்வேறு சிறிய கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இங்கு மக்கள் கூடியதால் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை.
இதை அறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் தெரு தெருவாக சென்று ஒலிபெருக்கி மூலம் கடைகளை அடைக்குமாறு கூறினர். மே 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் திறக்கக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து கடைகள் மூடப்பட்டன.