தவளக்குப்பம், வில்லியனூர் பகுதிகளில் அதிரடி மதுபாட்டில்கள் விற்றதாக பார் உரிமையாளர் உள்பட 5 பேர் கைது - சாராயக்கடை உரிமையாளரும் சிக்கினார்

தவளக்குப்பம், வில்லியனூர் பகுதியில் தடையை மீறி மது பாட்டில்கள் விற்றதாக பார் உரிமையாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சாராயக்கடை உரிமையாளரும் சிக்கினார்.

Update: 2020-04-21 07:47 GMT
பாகூர்,

தவளக்குப்பத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மதுபானம், சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக் டர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் போலீசார் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 3 பேர், போலீசாரை கண்டதும் தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றிவளைத்தனர். இதில் 2 பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தமிழக பகுதியான ரெட்டிச்சாவடியை சேர்ந்த தினேஷ் (வயது 24), மதலப்பட்டு கிராமத்தை சேர்ந்த அருண்குமார் (24) என்பது தெரியவந்தது. ஊரடங்கை பயன்படுத்தி மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர் களிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் வில்லியனூர் பகுதியில் காரில் வைத்து மது பாட்டில்களை விற்றதாக ஏற்கனவே கைதானவர்கள் தெரிவித்த தகவலின்பேரில் வில்லியனூரை சேர்ந்த மதுபான பார் உரிமையாளர் அன்புசூர்யா (35), தொழில் அதிபர் கார்த்திகேயன், ரவுடி சிங்கார ரமேஷ் ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் தவமுருகன் (43). இவர் சாராயக்கடை நடத்தி வந்துள்ளார். தனது ஊழியர்கள் மூலம் சாராயம் விற்றது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்