தடையை மீறிய 32 மதுபான கடைகளின் உரிமம் ரத்து
புதுச்சேரியில் தடையை மீறிய 32 மதுபான கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுவை அரசு மருத்துவமனையில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று 12 பேர் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 15 பேர் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் புதுவை புதிய பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை என தெரிகிறது. எனவே போலீசாருடன் தனியார் காவலர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் ஆகியோரை கொண்டு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை கடுமையாக நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆட்டோக்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் தொடர்புடைய வருவாய் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீதான புகார்களை விசாரிக்க சப்-கலெக்டர் சஷ்வத் சவுரப் நியமிக்கப்பட்டுள்ளார். ஊரடங்கு தடையை மீறியதாக இதுவரை 32 மதுபான கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 2 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கை மீறியதாக மாநிலம் முழுவதும் இதுவரை 2,551 பேர் மீது வழக்குப்பதிவும், 15,304 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி கிராம பஞ்சாயத்துகளில் பொதுசேவை மையங்கள் நேற்று முதல் செயல்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.