திருவலம் அருகே, 3 பேரை கொன்று புதைத்த வழக்கில் கொலையாளிகள் 5 பேரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

திருவலம் அருகே 3 பேரை கொன்று புதைத்த வழக்கில், கொலையாளிகள் 5 பேரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-04-21 06:29 GMT
திருவலம்,

சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மார்ச் மாதம் ஒரு பெண்ணிடம் சீக்கராஜபுரம் மோட்டூரைச் சேர்ந்த யுவராஜ் (வயது 26), திருவலம் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (20), சீக்கராஜபுரம் பல்லவர் நகரைச் சேர்ந்த வாசு (20) ஆகிய 3 பேர் சங்கிலியை பறித்ததாக கைது செய்யப்பட்டனர்.

இந்த 3 பேரும் தனது கூட்டாளிகளான ஜெயபிரகாஷ், இளா என்கிற இளங்கோவன், சதீஷ், சூர்யா, சாரு ஆகிய 5 பேருடன் சேர்ந்து திருட்டு தொழில் போட்டியால் சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த ஆசிப் அகமது (26), திருக்கோவிலூர் தாலுகா தெளி பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (25), அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா (19) ஆகிய 3 பேரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்து திருவலம் அருகே கம்பராஜபுரம் பனந்தோப்பில் புதைத்ததாக கூறினர்.

யுவராஜ், அரவிந்தன், வாசு ஆகிய 3 பேரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த திருவலம் போலீசார் முடிவு செய்துள்ளனர். 3 பேரை கொன்று புதைத்த வழக்கில் கொலையாளிகள் 5 பேரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 5 பேரை பிடித்து விசாரித்தால் தான் கொலைக்காக காரணம் தெரிய வரும். புதைக்கப்பட்ட 3 பேரின் பிணங்களை தோண்டி எடுத்து, பிரேதப் பரிசோதனை செய்தால் தான் உண்மையான தகவல்கள் வெளிவரும், என திருவலம் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்