ஊரடங்கால் கறம்பக்குடி பகுதியில் புளி விற்பனை பாதிப்பு வியாபாரிகள் வேதனை
ஊரடங்கால் கறம்பக்குடி பகுதியில் புளி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமானம் இன்றி வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கறம்பக்குடி,
ஊரடங்கால் கறம்பக்குடி பகுதியில் புளி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமானம் இன்றி வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
புளி விற்பனை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை, புதுப்பட்டி, ஆத்தியடிப்பட்டி, வாண்டான்விடுதி ஆகிய ஊர்களில் புளி வியாபாரிகள் நூற்றுக்கணக்கானோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் விளையும் புளியம் பழங்களை வாங்கி அவற்றில் ஓடு, விதைகளை நீக்கி புளியை விற்பனை செய்வது வழக்கம். பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை புளி விற்பனை மும்முரமாக நடைபெறும்.
வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கறம்பக்குடி பகுதிக்கு வந்து புளியை வாங்கி செல்வர். இதைத்தவிர சிறு வியாபாரிகள் இரு சக்கர வாகனங்களில் கொண்டு சென்று கிராமம், கிராமமாக புளி விற்பனை செய்வதும் உண்டு.
மொத்த வருமானமும் இழப்பு
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கறம்பக்குடி பகுதியில் புளி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வருமானம் இழந்து சிறு வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பல்லவராயன்பத்தையை சேர்ந்த புளி வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘தமிழர்களின் அன்றாட உணவு தயாரிப்பில் புளி இன்றியமையாதது.
சீசன் காலங்களில் புளியை ஒரு ஆண்டுக்கு தேவையான அளவிற்கு ஒவ்வொரு குடும்பத்தினரும் வாங்கி வைத்து கொள்வர். புளி சீசன் நேரத்தில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வாங்கிய புளியை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.
புளி நிறம் மாறி விட்டால் பொதுமக்கள் வாங்க தயங்குவார்கள், விலைபோகாது. ஊரடங்கால் ஒரு ஆண்டிற்கான மொத்த வருமானத்தையும் இழந்து புளி வியாபாரிகள் தவித்து வருகிறோம். சிறு வியாபாரிகளான எங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும், என தெரிவித்தார்.