கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு சூப்பிரண்டிடம் ரூ.ஆயிரம் நிவாரணம் வழங்கிய சிறுவனுக்கு பாராட்டு

போக்குவரத்து சாலையில் விழித்திரு, விலகிஇரு, வீட்டிலேயே இரு கொரோனாவை ஒழிப்போம் என்ற கொரோனா வைரசின் படத்துடன் கூடிய விழிப்புணர்வு வாசகங்களை எழுதி கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

Update: 2020-04-21 04:10 GMT
கீழப்பழுவூர், 

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் அன்பே சிவம் அன்னதான குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து போக்குவரத்து சாலையில் விழித்திரு, விலகிஇரு, வீட்டிலேயே இரு கொரோனாவை ஒழிப்போம் என்ற கொரோனா வைரசின் படத்துடன் கூடிய விழிப்புணர்வு வாசகங்களை எழுதி கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருங்கள், 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவவும், முக கவசம் கட்டாயம் அணியவும் என்பன உள்ளிட்ட கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான பல்வேறு வழிமுறைகளை எடுத்துரைத்தார். மேலும் தற்போது கொரோனாவிற்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தில் பொதுமக்கள் அனைவருமே போலீசாக மாறி ஒருவருக்கு ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் போலீசார் அனைவரும் விழித்திருப்போம், விலகி இருப்போம், வீட்டிலேயே இருப்போம், கொரோனாவை ஒழிப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் இடையே அதே கிராமத்தை சேர்ந்த 4-ம் வகுப்பு படித்து வரும் சிவகுமார் மகன் மாதேஸ்வரன்(வயது 9) தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ரூபாய் ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம் உண்டியலோடு வழங்கினார். சிறுவனின் இந்த செயலை போலீசாரும், அங்கு கூடியிருந்த பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார்.

மேலும் செய்திகள்