ஊரடங்கை மீறி திருச்சி கடைவீதியில் குவிந்த மக்களால் பரபரப்பு

ஊரடங்கை மீறி திருச்சி கடைவீதியில் குவிந்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2020-04-21 07:38 IST
திருச்சி,

ஊரடங்கை மீறி திருச்சி கடைவீதியில் குவிந்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டும் பொதுமக்கள் வெளியே வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதுவும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை தான்.

ஆனால், ஊரடங்கு உத்தரவை மீறி திருச்சியில் வெளியே வருவோர் மற்றும் சாலைகளில் சுற்றி திரிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தாலும் குடும்பம், குடும்பமாக காய்கறி வாங்க வருவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

பலன் இல்லாத திட்டம்

இப்படி ஒரே நேரத்தில் காய்கறி வாங்க வருவோரை கட்டுப்படுத்துவதற்காக வார்டு வாரியாக தற்காலிக காய்கறி சந்தைகளில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் காய்கறி வாங்க அனுமதிக்கும் வகையில் அடையாள அட்டைகளையும் மாநகராட்சி நிர்வாகம் வழங்கியது. ஆனால், இந்த புதிய திட்டத்திற்கும் பலன் இல்லை. மக்கள் கூட்டம், கூட்டமாக காய்கறி வாங்க வருவதை தடுக்க முடியவில்லை.

திருச்சி காந்தி மார்க்கெட், பெரிய கடைவீதி, வெங்காய மண்டி பகுதிகளில் நேற்று அதிக அளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. வாகனங்களில் ரோந்து வந்த போலீசார் அவ்வப்போது அவர்களை விலகி செல்லுமாறு ஒலிபெருக்கியில் அறிவித்த வண்ணம் இருந்தனர். இதனால் கடைவீதி பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்