கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்வு: விருத்தாசலத்தில் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
விருத்தாசலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் 6 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானது. இதில் 4 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறது. நோய் பாதிப்பு உள்ள பகுதிகளான பாத்திமா நகர், ஆலடி சாலை, வீரபாண்டியன் தெரு, அபுல்கலாம் ஆசாத் தெரு, காட்டுக்கூடலூர் சாலை ஆகிய பகுதிகளில் மருத்துவ குழுவினர் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வேறு யாருக்கேனும் நோய்த்தாக்கம் உள்ளதா? என்பது குறித்து கண்டறிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்து இருந்தார். அதனடிப்படையில், விருத்தாசலம் நகராட்சி பகுதி முழுவதும் மொத்தம் 38 இடங்களில் ‘சீல்’ வைக்கப்பட்டு வெளி நபர்கள் யாரும் நகருக்குள் நுழையாதபடியும், நகரில் இருந்து வெளியே யாரும் செல்ல முடியாத வகையிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் நகரப்பகுதிக்குள் உள்ளேயும் மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு செல்வதை தடுக்கும் வகையில் விருத்தாச்சலம் பாலக்கரை, கடைவீதி, ராமச்சந்திரன் பேட்டை, பெரியார் நகர், மார்க்கெட் சந்தை, மற்றும் விருத்தாசலம் ஜங்சன் சாலை ஆகிய பகுதிகள் என்று 6 இடங்களில் நேற்று கூடுதலா சீல் வைக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு காய்கறிகள் வழங்கும் வகையில் நகராட்சி சார்பில் 16 வாகனங்களில் நேரடியாக காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தவிர வாரத்தில் 2 நாட்கள் மட்டும் வீட்டை விட்டு வெளியே வந்து மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் வண்ணம் 3 நிறங்களில் அனுமதி சீட்டும் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 21 ஆயிரத்து 150 அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு வருவதாக நகராட்சி நகராட்சி ஆணையாளர் பாண்டு தெரிவித்தார்.
நேற்று, விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் ஊர்க்காவல் படையினர் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் நகர பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வாகனங்களில் வந்தவர்களிடம் நகராட்சியில் இருந்து வழங்கப்பட்ட அனுமதி சீட்டு உள்ளதா? எந்த காரணத்துக்காக வெளியே வந்தீர்கள் என்று விசாரணை நடத்திய பின்னரே அனுமதித்தனர். தேவையின்றி வந்தவர்களை போலீசார் கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். போலீசாரின் இந்த கெடுபிடி காரணமாக நகரில் நேற்று பரபரப்பு நிலவியது.