திருச்சி மாநகரில் கொரோனாவிற்காக தடை செய்யப்பட்ட பகுதிகள் 20 ஆக அதிகரிப்பு மாற்றுப்பாதை வழியாக செல்பவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்துவார்களா?
திருச்சி மாநகரில் கொரோனாவிற்காக தடை செய்யப்பட்ட பகுதிகள் 20 ஆக அதிகரித்து உள்ளது. மாற்றுப்பாதையில் செல்பவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்துவார்களா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
திருச்சி,
திருச்சி மாநகரில் கொரோனாவிற்காக தடை செய்யப்பட்ட பகுதிகள் 20 ஆக அதிகரித்து உள்ளது. மாற்றுப்பாதையில் செல்பவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்துவார்களா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
32 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 46 பேர் திருச்சி அரசு மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் நன்றாக குணம் அடைந்த 32 பேர் கடந்த புதன்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீட்டிற்கு சென்ற பின்னரும் 14 நாட்கள் வெளியே வராமல் தனிமையில் இருக்கவேண்டும் என அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
32 பேர் போக மீதம் இருந்த 14 பேருடன் தற்போது புதிதாக சேர்ந்து உள்ள 8 பேரையும் சேர்த்து தற்போது திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 22 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தடை செய்யப்பட்ட பகுதிகள்
கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர்கள் வசித்த தெருக்கள் எல்லாம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது வீட்டு உறுப்பினர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. மாநகராட்சி சார்பில் அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது.
20 ஆக அதிகரிப்பு
திருச்சி மாநகரில் தென்னூர் ஆழ்வார்தோப்பு, தில்லைநகர், ரகுமானியாபுரம், உறையூர், பாலக்கரை, கே.கே.நகர் உள்பட 9 இடங்களில் உள்ள தெருக்கள் முதலில் தடை செய்யப்பட்ட பகுதிகளாக இருந்தது. அதன் பின்னர் காஜாநகர், அரபி கல்லூரி சந்து, மன்னார்புரம், காந்தி மார்க்கெட், குத்பிஷாநகர் உள்பட மேலும் 11 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அடைக்கப்பட்டு அங்கும் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பகுதிகளில், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் வெளியே வரக்கூடாது என்பதால் அந்த பகுதிகள் தொடர்ந்து போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள்ளேயே இருந்து வருகின்றன.
மாற்றுப்பாதை வழியாக...
இந்நிலையில், பாலக்கரை உள்ளிட்ட சில இடங்களில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் போலீசாரின் கண்காணிப்பு வளையத்தையும் மீறி மாற்றுப்பாதை வழியாக கார்கள், இருசக்கர வாகனங்களில் மக்கள் சென்று வருகிறார்கள். இதனால் அவர்களும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
எனவே தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் யாரும் உள்ளே செல்ல முடியாத வகையில் கண்காணிப்பை போலீசார் பலப்படுத்துவார்களா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.