ஊரடங்கால் தமிழக ஆம்புலன்ஸ் கேரள எல்லையில் தடுத்து நிறுத்தம்; வியாபாரி திடீர் சாவு குமரியில் பரபரப்பு
கொரோனா ஊரடங்கால் தமிழக ஆம்புலன்ஸ் கேரள எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் உடல்நிலை பாதிப்படைந்த வியாபாரி திடீரென இறந்தார்.
குளச்சல்,
கொரோனா ஊரடங்கால் தமிழக ஆம்புலன்ஸ் கேரள எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் உடல்நிலை பாதிப்படைந்த வியாபாரி திடீரென இறந்தார்.
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வியாபாரி
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தாகா (வயது 52). வியாபாரியான இவர் குமரி மாவட்டம் மண்டைக்காடு கோவில் திருவிழாவையொட்டி அங்கு தற்காலிக கடை அமைத்திருந்தார். இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு போடப்பட்டதால் அவரால் சொந்த மாநிலம் செல்ல முடியவில்லை. இதனால் அங்கேயே தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் அவருடைய காலில் பெரிய புண் ஏற்பட்டது. இந்த புண் ஆறாததால், அவருடைய உடல் நிலை மேலும் பாதிப்படைந்தது. சிகிச்சைக்காக நெய்யூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழக ஆம்புலன்சுக்கு அனுமதி மறுப்பு
குடும்பத்தினர் அவரை தொடர்ந்து கண்காணித்தால் உடல்நிலை சீராக இருக்கும் என்று டாக்டர்கள் கருதினர். இதனையடுத்து சொந்த ஊரான கொல்லம் மாவட்டத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதன்படி ஆம்புலன்ஸ் வாகனத்தில் தாகாவை ஏற்றிக் கொண்டு, கேரளா நோக்கி புறப்பட்டது.
இருமாநில எல்லையான களியக்காவிளையில் குமரி போலீசார் அந்த ஆம்புலன்சை கேரளாவுக்கு செல்ல அனுமதித்தனர். இந்த சோதனைச்சாவடியில் இருந்து சிறிது தொலைவில் கேரள மாநில இஞ்சிவிளை சோதனைச்சாவடி இருந்தது. அங்கிருந்த கேரள போலீசார், தமிழக ஆம்புலன்சை கேரளாவுக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்று தெரிவித்து விட்டனர்.
சாவு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால், இந்த நடவடிக்கையை கேரள போலீசார் மேற்கொண்டனர். இதனால் அந்த ஆம்புலன்ஸ் மீண்டும் குமரிக்கு திரும்பியது. இதற்கிடையே தாகாவின் உடல்நிலை திடீரென மோசமானது. எனவே, குளச்சலில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தமிழக ஆம்புலன்சை கேரளாவுக்கு செல்ல அனுமதிக்காததால் தான் தாகா இறந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். இருமாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தான் தாகாவின் உடலை கேரளாவுக்கு கொண்டு செல்வதில் முடிவு ஏற்படும். மேலும், கொரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில் அவர் இறந்ததால், அந்த நபரின் சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.