அடையாள அட்டை இல்லாமல் வந்தவர்கள் மீது பாரபட்சமின்றி வழக்கு கண்காணிப்புக்குழு சிறப்பு ஐ.ஜி.சாரங்கன் அறிவுறுத்தல்

அடையாள அட்டை இல்லாமல் வந்தவர்கள் மீது பாரபட்சமின்றி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கண்காணிப்புக்குழு சிறப்பு ஐ.ஜி.சாரங்கன் அறிவுறுத்தினார்.

Update: 2020-04-20 23:13 GMT
தஞ்சாவூர்,

அடையாள அட்டை இல்லாமல் வந்தவர்கள் மீது பாரபட்சமின்றி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கண்காணிப்புக்குழு சிறப்பு ஐ.ஜி.சாரங்கன் அறிவுறுத்தினார்.

அடையாள அட்டை

தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியே செல்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை 3 வண்ணங்களில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அட்டை வைத்து இருப்பவர்கள் வாரத்தில் 2 நாட்கள் வெளியே வந்து காய்கறி, மளிகை பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம். இந்த அடையாள அட்டை இல்லாமல் வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மண்டல கொரோனா தடுப்பு கண்காணிப்புக்குழு சிறப்பு ஐ.ஜி.சாரங்கன் நேற்று தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களுக்கு சென்று இது முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.

பாரபட்சமின்றி நடவடிக்கை

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள பாலாஜிநகர், சுந்தரம்நகர் பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வாகனங்களில் வருபவர்கள் அடையாள அட்டை வைத்து இருக்கிறார்களா? என சோதனை செய்தார். மேலும் அங்கு இருந்த போலீசாரிடம் அடையாள அட்டை இல்லாமல் வருபவர்கள் மீது பாரபட்சமின்றி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.பின்னர் அவர் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் குடியிருப்பு பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறுவதையும் பார்வையிட்டார். அப்போது தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோல் வல்லத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வல்லத்தில் இருந்து ஆலக்குடி செல்லும் சாலை, கடைவீதி, காய்கறி மார்க்கெட், அண்ணா சிலை சாலை ஆகியவை பெரிய இரும்பு தடுப்புகளை கொண்டு போலீசார் அடைத்துள்ளனர். இந்தநிலையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் வல்லத்தில் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ள சாலைகளை பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்