3 மகள்களுடன் பெண் தற்கொலை முயற்சி: கல்லூரி மாணவியும் பரிதாப சாவு
கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மன வேதனை அடைந்த பெண் தனது 3 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார். இதில் இளம்பெண் ஒருவர் இறந்த நிலையில் நேற்று மற்றொரு பெண் பரிதாபமாக இறந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் கூனங்குளம் வடக்குத் தெருவில் வசித்து வருபவர் சூசை மாணிக்கம் (வயது 50). இரும்பு வியாபாரி. இவருக்கு ஜெயரத்தினம்(40) என்ற மனைவியும், அஞ்சனாதேவி(22), பொன்னுலட்சுமி (19), முனீஸ்வரி (9) ஆகிய மகள்களும் இருந்தனர். பொன்னுலட்சுமி அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அஞ்சனா தேவி பட்டப்படிப்பு முடித்து வீட்டில் இருந்து வந்துள்ளார். முனீஸ்வரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
இந்தநிலையில் சூசை மாணிக்கத்திற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்றபோது அவருக்கு கல்லீரலில் வீக்கம் இருப்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து சூசை மாணிக்கம், தனது மனைவி ஜெயரத்தினத்திடம் கல்லீரலில் வீக்கம் இருப்பதால் தன்னால் நீண்டகாலமாக வாழ முடியாது என கூறியுள்ளார். இதனால் வேதனை அடைந்த ஜெயரத்தினம், 3 மகள்களுக்கும் எலி மருந்தை கொடுத்து தானும் சாப்பிட்டார். இதில் அஞ்சனாதேவி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மேலும் ஜெயரத்தினம், பொன்னுலட்சுமி, முனீஸ்வரி ஆகியோர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களில் பொன்னுலட்சுமி, முனீஸ்வரியை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் கல்லூரி மாணவியான பொன்னுலட்சுமி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயரத்தினம், முனீஸ்வரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.