வருமானம் இன்றி தவிக்கும் டிரம்ஸ்-தப்பாட்ட கலைஞர்கள்

ஊரடங்கு காரணமாக டிரம்ஸ்-தப்பாட்ட கலைஞர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

Update: 2020-04-20 22:00 GMT
காரைக்குடி, 

காரைக்குடி நகரில் டிரம்ஸ் செட் மற்றும் தப்பாட்டம் அடிக்கும் தொழிலை நம்பி 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் உள்ளனர். கோவில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கும், துக்க நிகழ்ச்சிகளுக்கும் டிரம்ஸ் மற்றும் தப்பாட்டம் நடத்தி தங்களது பிழைப்பை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் ஊரடங்கு காரணமாக இவர்களுக்கு எவ்வித வருமானம் இல்லாமல் வறுமையின் பிடியில் சிக்கி உள்ளனர். தற்போது இவர்களுக்கு எவ்வித தொழிலும் இல்லாததால் சிலர் ஒப்பந்த முறைப்படி தூய்மை பணிக்கு சென்றுள்ளனர்.

இதுகுறித்து இந்த தொழிலை செய்து வரும் அருள்அய்யாலு என்பவர் கூறியதாவது:-

காரைக்குடி பகுதியில் சத்யாநகர், பனந்தோப்பு, சந்தைப்பேட்டை ஆகிய பகுதியில் டிரம்ஸ் செட் மற்றும் தப்பாட்ட கலைஞர்கள் வசித்து வருகின்றனர். எங்களுக்கு ஆண்டிற்கு 6 மாத காலம் சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகள் இருக்கும். மற்றபடி 6 மாதங்கள் எவ்வித வேலையும் இல்லாமல் இருக்கும். அத்தகைய காலத்தில் நாங்கள் தினக்கூலி வேலைக்கும், சிலர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணிக்கும் செல்வது உண்டு. டிரம்ஸ் செட் தொழிலுக்கு சென்றால் ஒரு நபருக்கு ரூ.400 முதல் ரூ.600 வரை கிடைக்கும். 

தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தொடர் ஊரடங்கு அமலில் உள்ளதால் எவ்வித நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. இதனால் நாங்கள் வருமானம் இல்லாமல் வறுமையில் உள்ளோம். இதுதவிர அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் கூட முறையாக எங்கள் பகுதிக்கு வரவில்லை. எனவே எங்களை போன்ற கலைஞர்களுக்கு நிவாரணம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்