‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: தாளவாடியில் முட்டைகோஸ் பயிர்களை அதிகாரிகள் ஆய்வு

தாளவாடியில் முட்டைகோஸ் பயிர்களை சந்தைப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தது குறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, அங்கு அதிகாரிகள் நேரில் வென்று ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2020-04-20 22:45 GMT
தாளவாடி, 

தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தொட்டகாஜனூர், சூசைபுரம், அருள்வாடி, மெட்டல்வாடி, பனக்கள்ளி, தலமலை, கோடிபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் 500 ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. 

3 மாத பயிரான முட்டைகோஸ் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன. ஆனால் கொரோனா பாதிப்பு எதிரொலியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், முட்டைகோஸ் வாங்குவதற்காக வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் முட்டைகோஸ் பறிக்கப்படாமல் அழுகும் நிலை ஏற்பட்டது. எனவே சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். 

இதுபற்றிய செய்தி கடந்த 17-ந் தேதி ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியாகி இருந்தது. இந்தநிலையில் தாளவாடி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) பிரியா மற்றும் அதிகாரிகள் தாளவாடி பகுதியில் முட்டைகோஸ் பயிர்களை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அறுவடைக்கு தயாராக உள்ள முட்டைகோஸ்கள் குறித்து அதிகாரிகள் விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். 

இதில் சுமார் 70 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு விளைந்த முட்டைகோஸ் சந்தைப்படுத்தப்படாமல் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முட்டைகோஸ்களை சந்தைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்