கொரோனா ஊரடங்கால் மணம் வீசவில்லை, மல்லிகை சாகுபடியாளர்களுக்கு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
கொரோனா ஊரடங்கால் மல்லிகை பயிர் சாகுபடி மற்றும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மல்லிகை பயிர் சாகுபடிக்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோளிங்கர்,
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த கூடலூர், ஜோதிமோட்டூர், வெங்குப்பட்டு, வயலாம்பாடி, பரவத்தூர், மின்னல், எஸ்.ஆர்.கண்டிகை உள்பட 40-க்கும் மேற்பட்ட சுற்று வட்டாரக் கிராமங்களில் 500 ஏக்கருக்கு மேலாக மல்லிகை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது மல்லிகைப்பூ விளைச்சல் அதிகமாக காணப்படுகிறது. அவை, தற்போது அறுவடை செய்யும் பருவத்தில் உள்ளது. ஆனால் அவற்றை அறுவடை செய்ய ஆட்கள் வருவதில்லை. அப்படியே பூக்களை அறுவடை செய்தாலும் தேவைக்குப்போக விவசாயிகள் குப்பையில் வீசுகின்றனர்.
மேற்கண்ட பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மல்லிகைப்பூ சென்னை, சித்தூர், பெங்களூரு, வேலூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு பஸ்கள், வேன் ஆகியவற்றின் மூலமாக அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும்.
இந்தநிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடமாட்டமும் இல்லை. இதனால் மல்லிகைப்பூவை அறுவடை செய்து அனுப்பி வைக்க போதிய வசதியில்லை. இதனால் மல்லிகை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் கடுமைய பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர் சாகுபடிக்காக முதலீடு செய்த பணம் கூட கிடைக்காமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கால் மல்லிகை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. செடிகளில் பூத்துக்குலுங்கும் பூக்கள் தோட்டத்திலேயே காய்ந்து கருகி உதிர்ந்து விடுகிறது. இதனால் நாங்கள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளோம். மல்லிகை செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச மின்மோட்டாரை பயன்படுத்தி வருகிறோம். அதற்குரிய 2 மாத மின் கட்டணத்தை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
மற்ற தொழிலாளர்கள், வியாபாரிகளுக்கு சலுகை வழங்குவதுபோல் மல்லிகை பயிர் சாகுபடி விவசாயிகளுக்கும் அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். கடந்த ஆண்டு மல்லிகை செடி பயிரிட்டு வறட்சியால் காய்ந்து கருகி போய் விட்டது. ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருந்தும் போக்குவரத்து வசதி இல்லாததால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மல்லிகை செடிகளை பயிரிட்டு மணம் வீச செய்யும் விவசாயிகளின் வாழ்க்கை கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் மல்லிகைப்பூ மணம் வீசாமல் போய்விட்டதை நினைத்து வருத்தமடைகிறோம். எனவே தமிழக அரசு எங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
மல்லிகை பயிர் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் கிடையாது. அதற்கு தனியாக தோட்டக்கலைத்துறையின் அனுமதி பெற்று, மின் இணைப்பு பெற வேண்டும். இதனால் இன்றைக்கு விவசாயிகள் மின்கட்டண கடனாளிகளாக அவர்கள் மீது சுமை விழுந்துள்ளது. அரசு தான் அந்த பாரத்தை ஏற்க வேண்டும் என்பது மல்லிகை பயிரை சாகுபடி செய்யும் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.