ஊரடங்கு காரணமாக ரஷிய நாட்டு தம்பதி மகா தீப மலையில் தஞ்சம் - போலீசார் மீட்டனர்
ஊரடங்கு காரணமாக ரஷிய நாட்டு தம்பதி திருவண்ணாமலை மகா தீப மலையில் தஞ்சம் அடைந்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை நகரில் உள்ள மலையின் உச்சியில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும். இந்த மலையில் ஏற மக்களுக்கு வனத்துறை மற்றும் காவல்துறை மூலம் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி போலீசார் ஹெலிகேம் மூலமும் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.
நேற்று காலை திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமணாஸ்ரமம் பின் பகுதியில் உள்ள மலையில் 2 பேர் நடமாடுவது ஹெலிகேமில் தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு சென்றனர். பின்னர் போலீசார் அவர்களை ரமணாஸ்ரமம் வழியாக அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.
அதைத்தொடர்ந்து ஆசிரமத்தின் முன்பு உள்ள வெளிநாட்டினர் சிறப்பு முகாம் அருகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவண்ணாமலையின் அனைத்து பகுதிகளும் ஹெலிகேம் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கண்காணித்தபோது மகா தீப மலையில் 2 பேர் நடமாடுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு சென்று அவர்களை மீட்டு அழைத்து வந்தோம். அவர்கள் ரஷிய நாட்டு தலைநகர் மாஸ்கோவை சேர்ந்த விக்டர் (வயது 30), அவரது மனைவி டாடியானா என்பது தெரியவந்தது. அவர்கள் கடந்த ஜனவரி மாதம் சுற்றுலா விசாவில் வந்துள்ளனர். திருவண்ணாமலைக்கு வந்த அவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.300 கட்டணத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.
தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் விமான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் அவர்களால் சொந்த நாட்டிற்கு திரும்பி செல்ல முடியவில்லை.
அவர்களிடம் இருந்த பணம் காலியாகி விட்டதால் உணவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் மகா தீப மலையில் மன அமைதிக்காக தியானம் செய்வதற்காக நேற்று சென்றதாக தெரிகிறது. தற்போது அவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்க தனியார் தொண்டு நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளரும் அவர்களிடம் வாடகை வழங்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவை சேர்ந்த ஒருவர் மலையில் ஒரு குகையில் தங்கி இருந்தார். அவரை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு 2 முறை கொரோனா வைரஸ் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்று முடிவு வந்து உள்ளது. இதனால் அவர் ஓரிரு நாட்களில் அந்த மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.